காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தஞ்சையில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
2018ம் ஆண்டு பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்: 2018 ம் ஆண்டு பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணி மூப்பு அடிப்படையில் இன சுழற்சி முறை பின்பற்றப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட காலமுறை ஊதிய பணியிடங்களில் அரசு விதிகளின்படி தினக்கூலி அடிப்படையில் முறையாக பணி நியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கடந்த 2018 ஆம் ஆண்டு பொது சுகாதார துறை இயக்குனர் அரசுக்கு பரிந்துரை செய்த அடிப்படையில், அரசுத்துறை சுகாதாரத்துறை செயலாளர் அப்பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கி, நிதித்துறைக்கும் பரிந்துரை செய்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை.
பரிந்துரை செய்த இயக்குனரின் கோப்பு காலமாமதம் செய்யப்பட்டு வருகிறது .விளிம்பு நிலை சமூகத்தில் இருந்து பணிக்கு வந்திருக்கின்ற பணியாளர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் முதலமைச்சர் மற்றும் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு செல்கின்ற வகையிலும், கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தியும் மாநிலந் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.புருஷோத்தமன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கணேஷ் குமார், மாவட்ட துணைச் செயலாளர் டி. காயத்ரி, மாவட்ட அமைச்செயலாளர் எஸ்.துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் தி.திருநாவுக்கரசு ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் பத்தாண்டுகளுக்கு மேலான பணிபுரிந்து வருகின்ற பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு கடந்த 2018 பரிந்துரை அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் கால வரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் த.பாஸ்கரன், சங்க மாவட்ட பொருளாளர் எம்.வினோத் ஆகியோர் பேசினர். சங்க நிர்வாகிகள் டி.சச்சிதானந்தம், என்.வினோத், பி.பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சங்க மாவட்ட பொருளாளர் கார்த்தி நன்றி கூறினார்.