பெண் குழந்தையை கடித்த குரங்கு: இழப்பீட்டு தொகை வழங்கிய அரசு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒரு மாத பெண் குழந்தையை குரங்கு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வனத்துறை சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒரு மாத பெண் குழந்தையை குரங்கு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வனத்துறை சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. தற்போது குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையை கடித்த குரங்கால் அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே வீட்டிலிருந்த ஒரு மாத பெண் குழந்தையை குரங்கு கடித்ததால், காயமடைந்த குழந்தைக்கு அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வனத்துறை சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாளாம்புத்தூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி இசைவாணி. இவர்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி குழந்தையை வீட்டில் தரையில் பாயில் படுக்க வைத்த இசைவாணி அருகில் சமையல் வேலையில் மும்முரமாக இருந்தார்.
குழந்தையின் அழுகுரலால் ஓடி வந்த தாய்
அப்போது வீட்டிற்குள் புகுந்த ஒரு ஆண் குரங்கு குழந்தையின் தலையில் கடித்துள்ளது. குரங்கு கடித்ததால் குழந்தை வீறிட்டு கத்தியதால் அதிர்ச்சி அடைந்த இசைவாணி ஓடி வந்து பார்த்தபோது குழந்தையின் அருகில் குரங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தையில் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் குரங்கை விரட்டி விட்டனர். குரங்கு கடித்ததால் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது.
கூண்டு வைத்து குரங்கை பிடித்த வனத்துறை
உடனடியாக தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை இசைவாணி சேர்த்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவின்படி வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்ட வனத்துறையினர் பாளாம்புத்தூர் பகுதியில் கூண்டு வைத்து அந்த பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை ஆண் குரங்கை பிடித்து புதுக்கோட்டை மாவட்ட காப்புக்காட்டுப் பகுதியில் விட்டனர்.
குழந்தைக்கு இழப்பீட்டு தொகை வழங்கல்
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையை பார்வையிட்டு மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும், குரங்கு கடித்தால் அதற்கான இழப்பீடுத் தொகையை தமிழக அரசு வழங்குவது குறித்து, மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தமிழக அரசிடம் அதற்கான அனுமதியை பெற்றார்.
தொடர்ந்து வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன், வனவர் ஏ.சிவசங்கர், வனக்காப்பாளர் எம்.கலைச்செல்வன், வனக்காவலர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் , ஊராட்சி மன்றத் தலைவர் வேலாயும் ஆகியோர் தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை பார்வையிட்டனர். பின்னர் குழந்தையின் பெற்றோரிடம் தமிழக அரசின் சார்பில் ரூ.59,100 க்கான இழப்பீடு காசோலையை வழங்கினர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ஒற்றை ஆண்குரங்கு என்பதால் அது முரட்டு தனத்துடன் இருந்தது. மேலும் கூட்டமாக இருந்தால் துரத்தினால் ஓடிவிடும். ஆனால் தனியான குரங்கு என்பதாலும், அது ஆண் குரங்கு என்பதாலும் விரட்டினாலும் எதிர்த்து கொண்டு கடிக்க வந்தது. இருப்பினும் அதை துரத்தி விட்டோம். வனத்துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குரங்கை பிடித்து விட்டனர். இருப்பினும் வெகு தூரத்திற்கு அதாவது அடுத்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டால்தான் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.