தஞ்சையில் சோகம்... மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து இருவர் மீதும் விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
![தஞ்சையில் சோகம்... மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு Thanjavur news Landslide during sewer repair work one person death - TNN தஞ்சையில் சோகம்... மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/06/b60a5df596d4bdbc65956211fe1f9a921722908860222733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஒருவர் பரிதாபமாக பலியானார்
பாதாள சாக்கடையிலிருந்து கழிவு நீர் வழிந்தது
தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை லாயம் பகுதி ஜெகநாதன் நகரில் பாதாள சாக்கடையிலிருந்து அடிக்கடி கழிவு நீர் வழிந்து சாலையிலும், சாலையோர வாரியிலும் ஓடியது. இதனால், ஏற்பட்ட துர்நாற்றத்தால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இருப்பினும் இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படாதததால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் 10 நாள்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பழைய குழாய் அகற்றி புதிய குழாய் அமைக்கும் பணி
இந்நிலையில் பழைய குழாயை அகற்றிவிட்டு, புதிய குழாய் பதிப்பதற்காக 15 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் நேற்று மாலை தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில் பகுதி தேவபூமி நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் ஜெயநாராயணமூர்த்தி (27), புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வளம்பப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் தேவேந்திரன் (32) ஆகிய இருவரும் புதிய குழாய் பதிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் சிக்கினர்
அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து இருவர் மீதும் விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2 தொழிலாளர்களும் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டது குறித்து உடன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மற்ற தொழிலாளர்களுடன் இணைந்து இடுப்பளவு மண்ணில் சிக்கியிருந்த தேவேந்திரனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி
மண்ணுக்குள் சிக்கியுள்ள ஜெயநாராயணமூர்த்தியை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதற்காக 3 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டப்பட்டது. தகவலறிந்த மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஏடிஎஸ்பி., முத்தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியை விரைவுபடுத்தினர். தொடர்ந்து மண்ணில் புதைந்த ஜெயநாராயண மூர்த்தியையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
அங்கு ஜெயநாராயண மூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)