ஆடுகள் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்க தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆவணம் துலுக்கவிடுதி வடக்கில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு போய் கொண்டு இருக்கிறது. இதனால் ஆடு வளர்ப்பவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆவணம் துலுக்கவிடுதி வடக்கில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு போய் கொண்டு இருக்கிறது. இதனால் ஆடு வளர்ப்பவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே திருடர்களை பிடிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆவணம் துலுக்கவிடுதி வடக்கு பகுதியிலும் மற்றும் பேராவூரணி வட்டம் பட்டுகோட்டை பகுதிகளிலும் ஏழை, எளிய மக்கள் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் அதிகமாக வளர்த்து வருகிறார்கள். தோட்ட பயிர்கள் குறிப்பாக தென்னை சாகுபடி அதிக அளவிலும் பிற மரங்கள் வளர்ப்பது இப்பகுதியில் அதிகம். மேலும் பட்டுகோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு வட்டங்களில் பாசன குளங்கள் ஏரிகள் மூலம் பயிர் செய்து வருகிறார்கள்.
இப்பகுதியில் புஞ்சை நிலங்கள் அதிகமான பகுதியாகும். இப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய நிலமற்ற கூலி தொழிலாளிகள் குறிப்பாக ஏழை, எளிய நலிவடைந்த மக்கள் விவசாய தொழில் கூட மாடு வளர்ப்பது, கோழிகள் வளர்ப்பது, ஆடுகள் வளர்ப்பது அதிகம். இது இவர்களின் பாரம்பரிய தொழிலாகும். இவர்கள் ஆடு, மாடுகள் வளர்ப்புக்கு வேண்டி தோப்பு மற்றும் கொல்லை ஆகியவற்றில் வீடு கட்டிக் கொண்டு குடியிருப்பது வழக்கம்.
இந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வுக்கும் அன்றாட குடும்ப அடிப்படை செலவுக்கு குழந்தைகள் எதிர்கால கல்வி செலவுக்கும், திருமணம் செலவு என அனைத்து செலவுகளை செய்ய இப்பகுதி மக்களுக்கு ஆடுகள் வளர்ப்பது மிக பெரிய முக்கியத்துவ தொழிலாகும். ஆனால் பேராவூரணி வட்டம் ஆவணம் பகுதியில் தற்போது ஏழை, எளிய மக்களின் வாழ்வுக்கும் அன்றாட செலவுக்கு பெரும் பயனாக உள்ள ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்று கறிக்கடைகளுக்கு விற்றுவிடுவது பெரும் பிரச்சினையையாக உள்ளது.
கடந்த மாதங்களில் மட்டும் நூறு மேற்பட்ட ஆடுகள் திருட்டு போயிருக்கிறது. இது இப்பகுதியில் தொடர் பிரச்சினையாக உள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் ஆடுகள் கிடைக்காமல் மிகவும் மனமுடைந்து கடன் சுமையால் ஆடு வளர்ப்பவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
கடந்த வாரத்தில் துலுக்கவிடுதி வடக்கு பகுதியில் ஒரே வீட்டில் இருந்து பத்து ஆடுகளை திருடர்கள் திருடி சென்று விட்டனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் திருச்சிற்றம்பலம் செருவா விடுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இது வரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை அஸ்திவாரமாக விளங்கும் ஆடுகள் திருட்டு போவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கையில், கடன் வாங்கி ஆடுகள் வளர்த்து குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்கும், குழந்தைகளின் கல்விக்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் ஆடுகளை திருடிச் சென்று விடுகின்றனர். இதனால் கடன் சுமை அதிகரித்து அவதியடைந்து வருகிறோம். எனவே ஆடு திருடர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.