"நல்லா படி கண்ணு நான் இருக்கிறேன்" ஓடோடி வந்து உதவிய மனிதர்... தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்
இரு மகள்களின் படிப்புக்காக சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் தனது கணவர் அருண்குமாரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவ சிகிச்சைக்கு செலவழித்துள்ளார்.

தஞ்சாவூர்: விபத்தில் தந்தை இறந்த 30வது நாளில் அவரது புகைப்படத்திற்கு பின்னால் ஓராண்டு கல்விக்கட்டணம் முழுவதையும் செலுத்தி 2 மாணவிகளின் இதயத்தை ஆனந்த கண்ணீரால் நிரம்ப செய்து நல்லா படி கண்ணு நான் இருக்கிறேன் என்று ஓடோடி வந்து உதவி செய்து நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை செயலளர் பிரபு ராஜ்குமார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா தேற்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் . இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வாகன விபத்தில் சிக்கி தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் தொடர்ந்து சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்தார். அன்றைக்கு வேலைக்கு சென்று உழைத்தால் மட்டுமே உணவு சாப்பிட முடியும் என்ற அளவிற்கு மிகவும் ஏழ்மையான குடும்பம் அருண்குமார் குடும்பம்.

குடும்பத்திற்கே ஆணிவேராக இருந்த அருண்குமாரின் அகால மரணம் அந்த குடும்பத்தையே புயல் காற்றில் சிக்கிய மரம் போன்று வேருடன் சாய்த்து விட்டது. தனது இரு மகள்களின் படிப்புக்காக சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் தனது கணவர் அருண்குமாரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவ சிகிச்சைக்கு செலவழித்துள்ளார் அவரது மனைவி மகேஸ். இருப்பினும் அருண்குமாரை காப்பாற்ற இயலவில்லை. குடும்பத்தின் ஒரே ஆதரவான கணவனையும் பறிகொடுத்து மகள்களின் படிப்பும் கேள்விக்குறியான சூழ்நிலையில் செய்வதறியாமல் பிணவறை வாசலில் கதறி அழுதுள்ளார் அருண்குமாரின் மனைவி மகேஸ்வரி.
அரசுப்பள்ளி வெகு தொலைவில் இருப்பதாலும் ஆரம்பம் முதல் பயின்ற பள்ளியில் பயில போதிய நிதிவசதி இல்லாமல், இனி படிப்பு அவ்வளவுதான் என்ற நிலையில் அருண்குமாரின் மகள் மிதுனா தனது படிப்பை தியாகம் செய்துவிட்டு குடும்ப சூழ்நிலையை கருதி தனது தாய் மகேஸ்வரியுடன் வயல் வேலைக்கு சென்று தன்னால் முடிந்த வருமானத்தை குடும்பத்துக்கு தர விரும்பினர்.
மறைந்த தனது தந்தையின் 30வது நாள் காரியத்தை முடித்து விட்டு அன்றுடன் தனது படிப்பை விட்டுவிட்டு வேலை தேடி செல்ல முயன்ற மாணவி மிதுனாவின் முடிவு குறித்து அந்த கிராமத்து நபர்கள் மூலம் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை செயலளர் பிரபு ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்தது. கல்வி என்ற பெரும் சொத்தை தந்தை மறைவு காரணமாக மறந்துவிட்டு குடும்பத்திற்கு உழைக்க தயாரான அந்த மாணவியை திக்குமுக்காட செய்ய முடிவு செய்தார் பிரபு ராஜ்குமார்.
உடனடியாக அருண்குமாரின் மகள்கள் பயின்ற பள்ளிக்கே நேரில் சென்று இரு மாணவிகளின் ஆண்டு கல்விக்கட்டணம் , சீருடைகட்டணம் உள்ளிட்டவைகளுக்காக ரூ.1 லட்சத்தை செலுத்தி அதற்கான ரசீதை இதற்காகவே கொண்டு வந்திருந்த மறைந்த அருண்குமார் புகைப்படத்தில் மறைத்து வைத்து மாணவி மிதுனாவிடம் ஒப்படைத்தார் .
பூஜை அறையில் வைக்கப்பட்ட தங்களது மறைந்த தந்தையின் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்தபடி அருண்குமாரின் மகள்கள் மிதுனா, சஞ்சனா ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது அவர்களிடம் அப்பாவின் போட்டோவிற்கு பின்புறம் இருக்கும் சீட்டை எடுத்து பார்க்க ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் கூறினார். என்ன சொல்கிறார் என்று தெரியாத நிலையில் அதை எடுத்து பார்த்த மிதுனா, சஞ்சனா ஆகியோர் தங்களுக்கான ஆண்டு கல்விக்கட்டணம் செலுத்தப்பட்ட ரசீது இருந்ததை கண்டு ஆச்சர்யத்துடன் ஆனந்த கண்ணீர் விட்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.
நல்லா படிங்க கண்ணுங்களா, எதை பற்றியும் நினைக்க வேண்டாம். அப்பா ஸ்தானத்துல இருந்து உங்க படிப்பை நான் பார்த்துக்குறேன் என்று அதை செயல்படுத்தி காட்டி இருண்டு போய்விட்டது எதிர்காலம் என்று நினைத்த அந்த மாணவிகளுக்கு கலங்கரை விளக்கமாக நான் இருக்கிறேன் என்று 30வது நாள் காரியத்தின் நிகழ்வின் போது அந்த மாணவிகளை ஆனந்த கண்ணீர் விட செய்து டிவிஸ்ட் கொடுத்து விட்டார் பிரபு ராஜ்குமார்.
யார் என்றே தெரியாத பெண்ணா நீ இருந்தாலும் நீயும் என் பெண் மாதிரி தான் . என் பெண்ணா நினைச்சு உன் அப்பா ஸ்தானத்துல இருந்து நான் படிக்க வைக்கறேன், படிப்பு முக்கியம் கண்ணு – எந்த சூழ்நிலையிலும் படிப்பை கைவிட்டு விடாதே “ என்று ஆறுதல் கூறிய பிரபு ராஜ்குமாருக்கு கண்ணீர் மல்க கை கூட்டி அருண்குமார் குடும்பத்தார் நன்றி தெரிவித்த நிமிடம் அந்த கிராமமே நெகிழ்ச்சி அடைந்து காணப்பட்டது.





















