தஞ்சையில் பாஜக நிர்வாகிகளுக்கு வீட்டுக்காவல்... பலத்த போலீஸ் பாதுகாப்பு
தஞ்சாவூரில் முன்னெச்சரிக்கை அடிப்படையில் நேற்று இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசான சிவம், மாவட்ட செயலாளர் குபேந்திரன் உள்பட 10 பேரை கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரத்தில் தஞ்சையில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் ஆகியோரை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் போராட்டம் நடத்துவதாக இந்து முன்னணியினர்அறிவித்திருந்தனர். இதனால் மதுரை மாவட்டத்தில் 144 படை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பா.ஜனதா, இந்து முன்னணி, சிவசேனா கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்தும், வீட்டு காவலிலும் வைத்து வருகின்றனர். தஞ்சாவூரில் முன்னெச்சரிக்கை அடிப்படையில் நேற்று இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசான சிவம், மாவட்ட செயலாளர் குபேந்திரன் உள்பட 10 பேரை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் தஞ்சையில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் ஆகியோரை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் அளித்த நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்பவர்களை போலீசார் கைது செய்து வருவது கண்டிக்கதக்கது. எத்தனை பேரை கைது செய்தாலும், வீட்டு காவலில் வைத்தாலும் திருப்பரங்குன்றம் மலையை அசுத்தப்படுத்துவதையோ அல்லது கைப்பற்றி விடலாம் என நினைப்பதையோ ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. வழிப்பாட்டு வழிமுறைகளை மாற்றி விடலாம் என யார் நினைத்தாலும் அது நடக்காது.
வீட்டு காவலில் வைத்தாலும் அச்சப்பட மாட்டோம். திருப்பரங்குன்றம் மலையை மீட்டு எடுப்பதற்காக இந்துக்கள், இந்து உணர்வாளர்கள் எதற்கும் தயார் நிலையில் உள்ளோம். திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்கும் முயற்சி மூலமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய இந்து எழுச்சி ஏற்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் மலையின் புனித தன்மையை காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலைக்கு கந்தர் மலை என்று பெயர் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் புனித தன்மையைக் சிலர் சீரழித்து வருகின்றனர். ஆடு பலி இடுவது, அசைவ உணவு சாப்பிடுவது என இந்து மக்களின் விரோத செயலில் ஈடுபடுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்க இன்று இந்து அமைப்பு சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் போலீசார் எங்களை வீட்டு காவலில் வைத்துள்ளனர். இதற்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்க அனைவரும் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார். இதுதவிர மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜனதா, இந்து முன்னணி, சிவசேனா கட்சி நிர்வாகிகள் 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் வீட்டுகாவலில் வைத்தும், கைதும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

