தேடினாலும் கிடைக்கலையே... வழிகாட்டி பெயர் பலகைகள் மீது போஸ்டர்கள்: தவிக்கும் சுற்றுலாப்பயணிகள்
பெயர் பலகைகள் மீது விளம்பர போஸ்டர்களை ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தஞ்சை மாநகரில் பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படும் வழிகாட்டி பெயர் பலகைகளை சீரமைக்க வேண்டும்
தஞ்சாவூர்: பெயர் பலகைகள் மீது விளம்பர போஸ்டர்களை ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தஞ்சை மாநகரில் பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படும் வழிகாட்டி பெயர் பலகைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த பணிகள்
தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. சாலைகளும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் உலக புகழ் பெற்ற பெரியகோயில், சரஸ்வதி மகால் நூலகம், அரண்மனை, கலைக்கூடம் போன்றவை அமைந்துள்ளன. இதனால் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் தஞ்சைக்கு வந்து செல்கின்றனர்.
வழிகாட்டி பெயர் பலகைகளின் அவலம்
இவர்கள் எந்தவித சிரமமும் இன்றி குறிப்பிட்ட இடங்களுக்கும், உறவினர்கள் வீடுகளை எளிதாக கண்டறியவும் சாலையோரங்களிலும், தெருமுனைகளிலும் வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பலகைகளில் தெருக்களின் பெயர், சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் விபத்து நடைபெறும் பகுதி, மெதுவாக செல்ல வேண்டிய பகுதி போன்றவை குறித்தும் வேண்டும் எனவும் எழுதப்பட்டுள்ளன.
விளம்பர நோட்டீஸ்களுக்காக அமைக்கப்பட்டதா?
ஆனால் முக்கிய சாலைகளில் உள்ள வழிகாட்டி பெயர் பலகைகள் மீது விளம்பர போஸ்டர்கள், ஆபர் நோட்டீஸ்கள், துணிக்கடை விளம்பர நோட்டீஸ் என பல்வேறு நோட்டீஸ்களையும் சிலர் ஒட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வரக்கூடிய மக்கள் குழப்பம் அடைந்து திசை தெரியாமல் வழி மாறி செல்கின்றனர்.
எச்சரிக்கை பலகையிலும் போஸ்டரா?
தஞ்சை மாவட்டத்திலேயே அதிகம் விபத்து நடைபெறும் பகுதியாக தஞ்சை பெரியகோயில் அருகே உள்ள மேம்பாலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பலகையின் மீதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்பதுதான் வேதனை. அந்த போஸ்டர் கிழிக்கப்பட்டாலும் பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் தெரியவில்லை. சில இடங்களில் வழிகாட்டி பெயர் பலகைகள் உடைந்து காணப்படுகிறது. இப்படி செய்பவர்களுக்கு மனசாட்சியே இருக்காதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கம்பி மட்டுமே காட்சிப் பொருளாக நிற்கிறது
தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள தெரு வழிகாட்டி பெயர் பலகை உடைந்துள்ளது. இதை கயிறால் கட்டி வைத்துள்ளனர். மானம்புச்சாவடியில் உள்ள தெருவை குறிக்கக்கூடிய வழிகாட்டி பெயர் பலகை கம்பி மட்டும் சாட்சியாக நிற்கிறது. தெருவின் பெயர் எழுதப்பட்டிருந்த பலகை எங்கு சென்றது என்றே தெரியவில்லை. இதுமட்டுமல்ல... பாம்பாட்டி தெருவில் உள்ள தெருவை குறிக்கக்கூடிய வழிகாட்டி பெயர் பலகையில் எழுத்துக்கள் எதுவும் இல்லாமல் உள்ளது. அப்போ அது தெருவே இல்லையா என்ற கேள்விதான் எழுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்களும், வெளியூரில் இருந்து வரும் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே சேதம் அடைந்துள்ள வழிகாட்டி பெயர் பலகைகளை சீரமைப்பதுடன், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.