அதோ அங்க... இதோ இங்க...: வேப்பமுத்துக்களை சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் பெண்கள்!!!
இயற்கை உரம், மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படும் வேப்பங் கொட்டைகளை சேகரித்து விற்பனை செய்ய கிராமப்புறம் மற்றும் நகர் புறத்தில் உள்ள பெண்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தஞ்சாவூர்: இயற்கை உரம், மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படும் வேப்பங் கொட்டைகளை சேகரித்து விற்பனை செய்ய கிராமப்புறம் மற்றும் நகர் புறத்தில் உள்ள பெண்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும், வேப்பங்கொட்டை ஒரு கிலோ ரூ.100க்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவக்குணம் கொண்ட வேப்பங்கொட்டை
இயற்கையாகவே வேப்பங் கொட்டை மருத்துவ குணம் கொண்டது. வேப்ப மரங்களில் கொழுந்தாக உள்ள இலைகள் மருந்தாகவும் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிழல் தரும் மரமாக இருப்பது மட்டுமல்லாமல் நல்ல ஒரு கிருமி நாசினியாகவும் வேப்ப மரம் உள்ளது. வேப்பமரத்தின் இலைகள் போல வேப்பங்கொட்டைகளும் மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கும், வேப்ப எண்ணெய் தயாரிப்பதற்கும், இயற்கை உரம் தயாரிப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வேப்பங்கொட்டை கரைசலில் உள்ள 18 வகை ஆல்கலாய்டுகள்
வேப்பங்கொட்டை கரைசலில், 18 வகையான ஆல்கலாய்டுகள் உள்ளன. வேப்பங்கொட்டையில் எடுக்கப்படும் வேப்பெண்ணெய் சிறந்த இயற்கை முறை பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்த கூடியதாகவும் உள்ளது. வேப்ப எண்ணெய் பயன்படுத்துவதை விட, வேப்ப முத்துக்களை சேகரித்து, அதை இடித்து, பயன்படுத்துவது அதிக நன்மை தரும். இதில், 18 வகையான ஆல்கலாய்டுகள் முழுமையாக கிடைக்கின்றன. வேப்பங்கொட்டை கரைசலை பயிர்களுக்கு தெளிக்கும்போது, கரைசல் பயிர்களின் மேல் படிகிறது.
பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கு வேப்பங்கொட்டை கரைசல்
பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய் கட்டுப்பாடு இரண்டிற்கும் வேப்பங்கொட்டை கரைசல் நல்ல தீர்வாக உள்ளது. வேம்பின் வாசனை, பூச்சிகளை விரட்டும். வேம்பின் கசப்பு சுவையால், பூச்சிகள் பயிரை சாப்பிடாது. கசப்பு சுவையையும் மீறி உண்ணும் பூச்சிகளின் வயிறு மந்தம் அடைகிறது. தொடர்ந்து உண்ணும் போது பூச்சிகளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு இறந்து விடுகின்றன.
வேப்பங்கொட்டைகள் சேகரிக்கும் பணி
இப்படி விவசாயப்பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது வேப்பங் கொட்டைகள். வேப்ப மரத்தில் இருந்து விழும் வேப்பம்பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேகரித்து காயவைத்து அதிலிருந்து வேப்பங்கொட்டைகளை பிரித்து கடைகளில் விற்று வருகிறார்கள்.
தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை தற்போது வேப்பங்கொட்டைகளை சேரித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்கள் சேகரிக்கும் வேப்பங்கொட்டைகளை வியாபாரிகள் அந்தந்த பகுதிகளுக்கே நேரடியாக வந்து வாங்கி வருகிறார்கள்.
கிலோவுக்கு ரூ.100 விலை நிர்ணயம்
அது மட்டுமல்லாமல் சேகரிப்பவர்கள் நேரடியாக கடைகளுக்கு கொண்டு சென்று வேப்பங்கொட்டைகளை விற்று, வருவாய் ஈட்டி வருகிறார்கள். தற்போது 1 கிலோ வேப்பங்கொட்டை ரூ.100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேப்பங்கொட்டை சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பெண்கள் தரப்பில் கூறுகையில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வேப்பங்கொட்டை சீசன் ஆகும். இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் வேப்பம்பழம் மரத்தில் குறைவாகவே காய்த்துள்ளது. கடந்த ஆண்டு சீசனில் வேப்பம்பழம் காய்ப்பு அதிகமாக இருந்தது.
கடந்தாண்டு கிலோ ரூ.120க்கு எடுத்தாங்க
எண்ணெய் மற்றும் மருத்துவத்துக்காக சேகரிக்கப்படும் சுத்தமான வேப்பங்கொட்டை (முத்துக்கள்) கடந்த ஆண்டு 1 கிலோ அதிகபட்சமாக ரூ.120 வரை விலை போனது. ஆனால் தற்போது 1 கிலோ வேப்பங்கொட்டைக்கு ரூ.100 மட்டுமே விலை கிடைக்கிறது. சேகரிக்கப்படும் வேப்பங்கொட்டைகள் மருந்து பொருட்கள் தயாரிப்பதற்காகவும், பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பதற்காகவும், வேப்ப எண்ணெய் தயாரி்ப்பதற்காகவும் வியாபாரிகள் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
வேப்பங்கொட்டைகள் சேகரிப்பதில் ஆர்வம்
அதேபோல இயற்கை உரத்துக்காக வாங்கப்படும் தோலுடன் கூடிய வேப்பங்கொட்டைகள் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. இவற்றை விவசாயிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்கின்றனர். பல ஊர்களில் வேம்பு உள்ளிட்ட பல வகையான மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வரும் நிலையில் கிராமங்களில் தான் ஓரளவு வேப்பமரங்கள் காணப்படுகின்றன. குடும்ப செலவை சமாளிப்பதற்காக பெண்கள் வேப்பங்கொட்டைகளை அதிகளவில் சேகரித்து விற்பனைக்கு அனுப்புவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.