பரதத்தில் அற்புதமான முத்திரைப் பதித்து சாதனை படைத்த தஞ்சை சிறுமி
பரத முத்திரைகளை பிசகாமல் பதிக்க திருப்புகழ் பாடலுக்கு அநாயசமாக ஆடி டிவைன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தின் தனது பெயரை வலுவாக பதித்துள்ளார்.
தஞ்சாவூர்: சின்ன விதைக்குள் ஆலமரமே ஒளிந்துள்ளது. அதுபோல் பரத நாட்டியத்தில் நச்சென்று முத்திரைப்பதித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார் தஞ்சை மாவட்டம் மருங்குளம் கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுமி.
எதைச் செய்தாலும் தனி முத்திரையோடு செய்ய வேண்டும். மற்றவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகச் செய்ய வேண்டும். முழுமையான உறுதியுடன் செய்தால் வெற்றிக்கோட்டையின் கதவுகள் என்றும் உங்களுக்காக திறந்திருக்கும். வளங்களிலேயே மகத்தான நேர வளம்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். செய்ய நினைத்ததை செய்ய வேண்டிய செயலுக்காக ஒதுக்கிய ஒவ்வொரு வினாடியையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
லட்சியத்தை அடைவதில் தாமதமானாலும் மனம் தளராமல் முன்னேற வேண்டும். தோல்வி அடைவதால் ஏற்படும் விரக்தியில் லட்சியத்தைக் கைவிடமாட்டேன் என்ற தீர்மானத்தோடு அடுத்தபடி நோக்கி நடப்பவர்களே சாதனையாளர்களாகின்றனர். ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் அணிவகுத்து நிற்பது பல தோல்விகள்தான். அந்த தோல்விகளை சுமந்து கொண்டே வெற்றியை நோக்கி நடந்தால்தான் லட்சியம் என்ற சுடரை கைப்பற்ற முடியும்.
அலைகளை கண்டு அச்சப்படுபவர்கள் ஆழ்கடலில் மறைந்திருக்கும் முத்துக்களை பெற முடியாது. தோல்விகளுக்குப் பயந்தால், பாரமாய்தான் வாழ இயலும். சாதனைகள் படைக்க முடியாது. இதை உணர்த்தும் விதமாக மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது என்று நீருபித்துள்ளார் 2வயது சிறுமி. என்ன விஷயம்.
தஞ்சை மாவட்டம் மருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியின் இரண்டு வயது மகள் விதுலா ஸ்ரீ. இந்த சிறுமிதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். கால்கள் பம்பரமாக சுழல... கைகள் பரத முத்திரைகளை பிசகாமல் பதிக்க திருப்புகழ் பாடலுக்கு அநாயசமாக ஆடி டிவைன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தின் தனது பெயரை வலுவாக பதித்துள்ளார்.
சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலக்கோட்டையூரில் உள்ளது விதுலா ஸ்ரீயின் பாட்டி வீடு. இவர்களின் வீட்டுக்கு பக்கத்தில் மேகநாதேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இங்கு தனது ஒரு வயது குழந்தை விதுலாஸ்ரீயுடன் விஜயலட்சுமி தங்கி இருந்தார். அப்போது, சிறுமியை அவரது பாட்டி அருகில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்று உள்ளார். கோயிலில் பரத கலைஞர் மாணவிகளுக்கு பரதம் கற்று தருவதை பார்த்த குழந்தை விதுலா ஸ்ரீ தானாகவே ஆட தொடங்கி உள்ளார்.
குழந்தையின் தாளத்திற்கு சரியாக ஆடும் திறமையை கண்ட பரதநாட்டிய ஆசிரியை திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆட பயிற்சி அளித்துள்ளார். மேலும் பரத முத்திரைகள் மற்றும் சுலோகங்களும் கற்று தந்துள்ளார். பசுமரத்தாணி போல் மனதில் பரத நாட்டிய ஆசிரியை கற்பித்தவற்றை கற்பூரம் போல் பற்றிக் கொண்ட சிறுமி விதுலா ஸ்ரீ தன் திறமையை வெளிக்காட்டி டிவைன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் தனது பெயரையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்கத்கது.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! என்ற பாடல் ஒலித்தால் போதும் சிறுமி விதுலாஸ்ரீயின் கால்கள் அச்சுரம் பிசகாமல் பரத முத்திரைகளை பதித்து நடனம் ஆடுகிறது. இதுமட்டுமா? மூஷிக வாகனனே, பச்சை வாகனனே போன்ற பக்திப்பாடல்கள் அனைத்திற்கும் பரதம் ஆடி அசத்துகிறார் விதுலாஸ்ரீ. மிகக்குறைந்த வயதில் அருமையாக பரத முத்திரைகளை பிடித்து பரத நாட்டியம் ஆடும் விதுலாஸ்ரீயின் திறமையை நேரில் பார்த்து டிவைன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகம் பாராட்டி விதுலாஸ்ரீயின் பெயரை பதிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.