அம்மாப்பேட்டை ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
தஞ்சை அருகே அம்மாப்பேட்டை ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சிக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
தஞ்சாவூர்: தஞ்சை அருகே அம்மாப்பேட்டை ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சிக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை துறை வாரியாக அளித்து பயன் பெற்றனர். சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த ஊராட்சித் தலைவர் உட்பட அனைவரையும் பொதுமக்கள் பாராட்டினர்.
தமிழக அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கும். அரசின் அனைத்து துறைகளும் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இதனால், அனைத்து துறைகளிலும் சேவைகளைப் பெற மக்கள் இணைய வழியாக அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அடித்தட்டு மக்கள் இணைய வழியில் சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால், அரசு சேவைகளைப் பெற பிறரின் உதவியை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அடித்தட்டு மற்றும் கிராமப்புற மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, அவர்களும் எளிதாக அரசின் சேவைகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தனது நேரடி கண்காணிப்பில் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும், இதில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று மக்களின் மனுக்களை நேரடியாக பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகள் துறை, மாநகராட்சிக்கு ஒட்டியுள்ள பஞ்சாயத்து, காவல் துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 13 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்படும்.
இந்த அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து, தீர்வு கண்டு பயன்பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தஞ்சை அருகே அம்மாப்பேட்டை ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் நடைபெற்றது. இதில் அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ராதிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊராட்சி) விஜய், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷம் புண்ணியமூர்த்தி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய்துறை. காவல் துறை, உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் துறை வாரியான குறைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். முகாமில் பங்கேற்ற மக்களுக்கு சர்க்கரை நோய், பிளட் பிரஷர் போன்றவை பார்த்து தேவையானவர்கள் சிகிச்சை அளிக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. முக்கியமான துறைகள் அனைத்தும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஏற்பாடுகளை செய்திருந்த ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.