கும்பகோணம் பகுதியில் மீட்கப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பு செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
இனிமேல் இவற்றை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் காணாமல் போன மற்றும் திருட்டு போன சுமார் ரூ.2 லட்சம் மதிப்பு செல்போன்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் செல் போன்கள் காணாமல் போனது. மேலும் பஸ் மற்றும் உணவகம் உட்பட பல பகுதிகிளல் பொதுமக்களிடம் இருந்து செல்போன்கள் திருட்டு போனது. இதை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்திருந்தனர்.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் காணாமல் போன மற்றும் திருட்டு போன செல்போன்கள் குறித்து விசாரணை நடத்தி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சில செல்போன்கள் கீழே கிடந்ததாக கூறி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதே போல் தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள செல்போன் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த செல்போன்களை ஐ.எம்.இ.ஐ. எண்ணை ஆய்வு செய்து அவற்றையும் கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து மீட்டனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பலான 11 செல்போன்களை துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்தி வாசன் தாலுகா போலீஸ்நிலையத்தில் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்தி வாசன் கூறுகையில், கும்பகோணம் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் காணாமல் போய் விட்டதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. செல்போன் வாங்கிய உடன் அதற்காக பெட்டியில் செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண் பதிவாகி இருக்கும். எனவே அந்த பெட்டியை தூக்கி வீசாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
தற்போது அறிமுகம் செய்யப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் செல்போன்களில் ஏராளமாள தொழில் நுட்ப வசதிகளை தெரிந்து வைத்திருந்தால் இ-மெயில் ஐ.டி.மூலம் விரைவில் கண்டு பிடிக்கலாம். செல்போனை கடவு சொல்(பாஸ்வேர்டு) யாராலும் யூகிக்க முடியாததாக இருக்க வேண்டும். தனியுரிமைகளை சைபர் குற்றவாளிகள் திருட வாய்ப்பு உள்ளதால், வங்கி கணக்கு, பணம் மற்றும் விலை மதிப்பில்லா பதிவுகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை சேமிக்க வேண்டாம்.
செல்போன் காணாமல் போனால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் செல்போனை கண்டுபிடிக்க எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செல்போன்கள் பெற்றவர்கள் தரப்பில் கூறுகையில், கவனக்குறைவால் காணாமல் போன செல்போன்கள் மற்றும் திருட்டு போன செல்போன்களை போலீசார் மீட்டு ஒப்படைத்துள்ளனர். இனிமேல் இவற்றை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.