15ம் நூற்றாண்டை சேர்ந்த பெருமாள் சிலையை விற்க முயற்சி: வசமாக சிக்கிய 7 பேர்
கைப்பற்றப்பட்ட சிலையானது சோழர் காலத்தில் செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இது தமிழ்நாட்டின் அறியப்படாத கோயிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்றும் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
தஞ்சாவூர்: 12 ஆண்டுகளாக மறைத்து வைத்து 15 முதல் 16 ம் நூற்றாண்டை சேர்ந்த 2.5 அடி உயர பெருமாள் ஐம்பொன் சிலையை விற்க முயன்ற 7 பேரை தஞ்சாவூர் சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சிலையின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வந்த தகவல்
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு கடந்த 8ம் தேதி தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மர்ம நபர்கள் சிலையை கடத்த முயற்சி செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தஞ்சை சரக காவல் ஆய்வாளர் தலைமையில் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
காரில் வந்தவர்களிடம் விசாரணை
இதில் சந்தேகத்திற்கிடமான முறையில் மேலதிருவிழாபட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேக நபர்களான சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் மகன் ராஜேந்திரன் (52), கும்பகோணம் தாலுக்கா, உடையார் தெரு அலமங்குறிச்சி பகுதியை சேர்ந்த சேகர் மகன் ராஜ்குமார்(36), திருவாரூர் மாவட்டம், இனாம் கிளியூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் மகன் தினேஷ் (28), அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் ஜெய்சங்கர் (58), கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தாலுகா, நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜய் (28) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
காரில் இருந்த பெருமாள் சிலை கண்டுபிடிப்பு
பின்னர் அவர்களின் வாகனங்களை சோதனையிட்ட போது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழங்கால 2.5அடி உயர உலோகப் பெருமாள் சிலை வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தினேஷிடம் விசாரித்ததில், அவரது தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த சிலை கிடைத்துள்ளது.
இது பற்றி தாசில்தாரிடமோ, கிராம நிர்வாக அலுவலரிடமோ தெரிவிக்காமல் தனது கால்நடை கொட்டகையில் மறைத்து வைத்திருந்தாக கூறியுள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு, தினேஷ் மற்றும் மேற்கண்ட நபர்கள் இந்த சிலையை வெளிநாடுகளுக்கு ரூ. 2 கோடிக்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததும் தெரிய வந்தது.
சிலை கடத்தல் தொடர்பாக 7 பேர் கைது
மேலும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹாரிஸ் (26), கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகன் அஜித்குமார் (26) ஆகிய இருவரும் பாதுகாப்பிற்காக இருசக்கர வாகனத்தில் வழிக்காவலுக்கு உடன் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் சிலை வாங்கியது தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவர்கள் மீது சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 7 பேரும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் (ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள்) பறிமுதல் செய்யப்பட்டன. பழங்கால உலோகச் சிலையும் கைப்பற்றப்பட்டு கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது.
15 முதல் 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிலை
முதற்கட்ட விசாரணையில் இந்த சிலை 15 முதல் 16 ம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட சிலையானது சோழர் காலத்தில் செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இது தமிழ்நாட்டின் அறியப்படாத கோயிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்றும் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிலை எந்தக் கோயில் திருடப்பட்டது என்பது குறித்தும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக சிலையை மறைத்து வைத்து பலமுறை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.