தஞ்சையிலிருந்து 4 மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்ட 1459 டன் யூரியா
தஞ்சையிலிருந்து 4 மாவட்டங்களுக்கு லாரிகளில் 1459 டன் யூரியா அனுப்பப்பட்டது.
தஞ்சாவூர்: சென்னையில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் வந்த 1,459 டன் யூரியா உரம் 4 மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம், ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப்பணிகள் முடிந்து விட்டது. ஒரு சில இடங்களில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் முக்கிய சாகுபடி பயிர் நெல்தான். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொண்டு வருகின்றனர்.
கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் விளைச்சல்தான் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அதிகளவு நடந்து வருகிறது.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும்.
தண்ணீர் திறப்பு தாமதமானால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி இலக்கை மிஞ்சி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி அணை திறப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதனால் குறுவை சாகுபடி அதிக அளவு நடைபெறும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோடை நெல் சாகுபடி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரம் மற்றும் இடுபொருட்கள் தேவையான அளவு வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 25 வேகன்களில் 1,459 டன் யூரியா உரம் நேற்று தஞ்சைக்கு வந்தது. இந்த உரமூட்டைகள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உரங்கள் கையிருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்