செங்கிப்பட்டியில் சாலைமறியல்... எதற்காக தெரியுங்களா?
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் செங்கிப்பட்டியில் கந்தர்வகோட்டை செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் 100 நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஆறு மாத கால ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தை மட்டுமே நம்பி உள்ளனர். ஆனால் 100 நாள் வேலை திட்டத்தை தங்களுக்கு தேவையான நபர்களுக்கு மட்டுமே அதிகாரிகள் வழங்குகின்றனர்.
வேலை பார்த்தவர்களுக்கு ஆறு மாதத்திற்கு மேலாக ஊதியம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர். எனவே 100 நாட்கள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் செங்கிப்பட்டியில் கந்தர்வகோட்டை செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மா.கம்யூ., மாவட்ட செயற்குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் பழனிச்சாமி, தமிழரசன், மருதமுத்து, சித்திரவேல், வியாகுலதாஸ், ராஜாங்கம், வசந்தா, அஞ்சலிதேவி மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

