100 நாள் வேலை திட்ட நிதியை அதிகப்படுத்தணும்... மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியினை அதிகப்படுத்த வேண்டும். போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கக் கூடாது
தஞ்சாவூர்: 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியினை அதிகப்படுத்த வேண்டும். போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கக் கூடாது என்று தொழிற்சங்க தலைவர்கள் ஏ.எம்.கோபு, ஜி.கிருஷ்ணன் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இ.கம்யூ., மூத்த தலைவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.எம்.கோபு, ஜி.கிருஷ்ணன் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. ஏஐடியூசி தொழிற்சங்க முன்னோடி ஏ.எம்.கோபு 12 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை சங்க மாநில தலைவர் அ.சாமிக்கண்ணு தலைமை வகித்தார்.
நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இதேபோல் தஞ்சாவூர் கீழராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக முன்பு நடைபெற்ற விவசாய தொழிலாளர் சங்க தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணன் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமையில் நடைபெற்றது.
போராட்ட அனுபவங்கள் குறித்து விளக்கம்
ஒன்றிய செயலாளர் பி.குணசேகரன் விவசாய சங்க தலைவர் எம்.இராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், ஏ.எம்.கோபு மற்றும் ஜி.கிருஷ்ணன் போராட்ட அனுபவங்கள் குறித்தும், சுரண்டலற்ற ,சமதர்ம சமுதாயம் உருவாக்க தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தது குறித்தும் பேசினர். நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் கோ.சக்திவேல், மாவட்ட பொருளாளர் ஜி.பாஸ்கர், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வி.கல்யாணசுந்தரம், தி.திருநாவுக்கரசு, வீரமோகன், ஆர்.கே.செல்வகுமார், வாசு இளையராஜா, மாநகர செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், ஏஐடியூசி நிர்வாகிகள் வெ.சேவையா, துரை.மதிவாணன், பி.செல்வராஜ், எஸ்.தாமரைச்செல்வன், பி.சுதா,கே.கல்யாணி ஆட்டோ சங்க ராஜா, ஞானசேகரன், பாலையன், நாடியப்பன், ஆசிரியர் ஓய்வு சுந்தரமூர்த்தி, விஏஓ ஓய்வு கருணாநிதி, பிரபாகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
100 நாள் வேலை திட்ட நிதியை அதிகப்படுத்தணும்
நிகழ்ச்சியில் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும், ஒரு நாள் தின ஊதியம் ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், வேலையில்லாத காலங்களில் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்டங்களை, நான்கு சட்ட தொகுப்பாக கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தப்பட்டது திரும்ப பெற வேண்டும், நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற, வாழ்க்கைக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை, காய்கறி, பெட்ரோல், டீசல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விவை உயர்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது .
முன்னதாக ஏ.எம் கோபு, ஜி.கிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.