(Source: ECI/ABP News/ABP Majha)
நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டம்..தமிழகத்தில் இறப்பு விகிதம் 8.1 சதவீதம் குறைந்தது!
நம்மைக் காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் வாயிலாக தமிழகத்தில் இறப்பு விகிதம் 8.1 சதவீதம் குறைந்துள்ளது என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர். பாலாஜி நாதன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நம்மைக் காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் வாயிலாக தமிழகத்தில் இறப்பு விகிதம் 8.1 சதவீதம் குறைந்துள்ளது என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர். பாலாஜி நாதன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உலக விபத்து காய நாளையொட்டி நிருபர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 2019ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 62,685 சாலை விபத்துகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதேபோல, சாலை விபத்துகளால் நிகழும் இறப்பு விகிதத்தில் தமிழகம் இரண்டாமிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டில் 66,763 சாலை விபத்துக்குள் நிகழ்ந்ததில் 7,918 பேர் உயிரிழந்தனர். இதைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம், கடந்த 2021 ஆம் ஆண்டில் 55,713 சாலை விபத்துகளில் 4,912 பேர் இறந்தனர்.
இந்த இறப்பு விகிதத்தை 2030 ஆம் ஆண்டில் 30 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தொற்றா நோய்களான சாலை விபத்து, தற்கொலை போன்றவற்றால் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதையும் குறைக்கும் விதமாக காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை, நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்படும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மாநிலத்தில் 500 இடங்கள் விபத்து அபாய பகுதிகளாகக் கண்டறியப்பட்டு உள்ளன. இப்பகுதிகளில் 8 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளிலுள்ள அவசர சிகிச்சை பிரிவில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நம்மைக் காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் கடந்த 10 மாதங்களில் விபத்துகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 8.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதை 50 சதவீதம் அளவுக்கு குறைக்கும் விதமாக இலக்கு நிர்ணயித்து அரசு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3,820 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள அவசர சிகிச்சை பிரிவில் 2021 ஆம் ஆண்டில் 27,152 பேர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 14,208 பேர் விபத்துகளில் சிக்கிய நோயாளிகள். இதேபோல, நிகழாண்டு இதுவரை 20,971 பேர் சிகிச்சை பெற்றதில், 13,422 பேர் விபத்துகளில் சிக்கியவர்கள். நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதில் இருந்து 6 மணிநேரத்துக்குள் அவசர சிகிச்சை மூலம் 938 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எஸ். மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.