ஆக்கிரமிப்பில் இருந்த கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடம் மீட்பு
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலுக்கு சொந்தமான இடம் கும்பகோணத்தை அடுத்த சேஷம்பாடி ஊராட்சி மூப்பக்கோயிலில் உள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் இடம் பல ஆண்டுகளுக்கு பிறகு கையகப்படுத்தப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோவிலான சாரங்கபாணி சுவாமி கோவில் உள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 12 வது திவ்ய தேசம். இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.
பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு உத்தான சயன கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், “நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!” என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், அப்படியே காட்சி கொடு! என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை உத்தான சயனம் என்பர்.
திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து “கும்பகோணம் சாரங்கபாணி கோவிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம்” செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலுக்கு சொந்தமான இடம் கும்பகோணத்தை அடுத்த சேஷம்பாடி ஊராட்சி மூப்பக்கோயிலில் உள்ளது. இந்நிலையில் இந்த இடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த 2 சமூகத்தினர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. இதனைத்தொடந்து அந்த இடத்தை கோவில் நிர்வாகம் கையகப்படுத்த முடிவு செய்தது.
அதன்படி கோவில் செயல் அலுவலர்கள் சிவசங்கரி, கணேஷ்குமார், பிரபாகரன், அறநிலையத்துறை ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் மவுனீஸ்வரன், நில அளவையர் ரேணுகா ஆகியோர் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான சுமார் 2 ஏக்கர் இடத்தை கையகப்படுத்தி, சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து தகவல் பலகை அமைத்தனர். இதனால் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.