Thanjavur: தஞ்சையில் விரைவில் புதிய பாலம்.. இது பயன்பாட்டுக்கு வந்தால் யாருக்கெல்லாம் பயன் தெரியுமா..?
10 மீட்டர் அகலமும், 35 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம் ரூ.2 கோடியில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் குலமங்கலம், கீழவெட்டி, நெய்வாசல், கண்ணந்தங்குடி கீழையூர் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே குலமங்கலத்தில் ரூ.2 கோடியில் 5 கிராம மக்கள் பயனடையும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்படும் இடத்தை திருச்சி வட்ட கண்காணிப்பு பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சை கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட தஞ்சை உட்கோட்டம், ஒரத்தநாடு, உட்கோட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், கும்பகோணம் உட்கோட்டம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்கள் சார்பில் சாலை புதுப்பித்து மேம்பாடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்ட பணிகள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை திருச்சி வட்ட கண்காணிப்பு பொறியாளர் செந்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின்போது ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சரின் அனைத்து கால நிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து என்ற திட்டத்தின் கீழ் குலமங்கலம் கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
10 மீட்டர் அகலமும், 35 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம் ரூ.2 கோடியில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் குலமங்கலம், கீழவெட்டி, நெய்வாசல், கண்ணந்தங்குடி கீழையூர் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள். இந்த பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் விவசாயிகள், பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பயனடைவார்கள்.
பின்னர் கண்காணிப்பு பொறியாளர் செந்தில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தில் கீழ் பணி முடிக்கப்பட்டுள்ள நெய்வாசல் கண்ணந்தங்குடி கீழையூர் சாலை பணிகளையும் ஆய்வு செய்து தரத்தினை உறுதி செய்தார். ஆய்வின் முடிவில் பாலம் கட்டும் பணியை விரைவாக முடித்திடவும் பணித்தள பாதுகாப்பை உறுதி செய்திடவும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் செந்தில்குமார் மற்றும் உதவி பொறியாளர் விஜய், சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

