தஞ்சாவூர் அருகே நீரில் மூழ்கிய சிறுமி உயிரிழப்பு - காப்பாற்ற சென்ற சிறுமியும் உயிரிழந்த சோகம்
’’தனது உயிர் தோழி, முழ்கினால் இறந்து போவார் என்று தெரிந்தும், காப்பாற்றிவிடமாட்டோமா என்று, கரையில் இருந்தவர்களை யாரும் அழைக்காமல், ஒடி சென்ற காப்பாற்ற சென்று இருவரும் உயிரிழப்பு’’
தஞ்சாவூர் அடுத்த செண்பகபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் குமார் மகள் ரூபிகா (13). அதே தெருவைச் சேர்ந்தவர் நீலமேகம் மகள் கௌசிகா (13). இருவரும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை சிறுமிகள் இருவரும் செண்பகபுரம் ஏரிப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மதியம் 11 மணியளவில் ரூபிகா முகம் கழுவ ஏரிக்குள் இறங்கினார். அவர் நிலை தடுமாறி தண்ணீருக்குள் மூழ்கினார். அவருடன் சென்ற கௌசிகா, அவரை காப்பாற்றச் சென்றார், அப்போது கௌசிகாவும் தண்ணீரில் மூழ்கினார். பின்னர் அப்பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தவர்கள், ஏரிக்குள் சென்றபோது அங்கு இரு சிறுமிகளும் நீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களை வெளியே கொண்டு வந்தனர். ஆனால் சிறுமிகள் இருவரும் இறந்து விட்டனர்.
பின்னர் தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் சிறுமிகளின் சடலத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், இறந்த குழந்தைகளின் தந்தையார்கள் மிகவும் ஏழ்மையிலுள்ள கூலி விவசாயிகள். இவர்கள் அன்றாடம் வேலைக்கு சென்று, சம்பாதித்து வந்தால் தான் குடும்பம் நடத்த முடியும். கொரோனா தொற்றால், வேலை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், தற்போது விவசாய தொழில் நடந்து வருவதால், அப்பகுதியிலுள்ளவர்கள் விவசாயப்பணிக்கு காலையில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவார்கள். இதனால், வீட்டிலுள்ள ஆடு, மாடுகளுக்கு புல், வைக்கோல்கள் வாங்கி போடுவதற்கு வசதி இல்லாததால், மேய்ச்சலுக்காக ஏரிக்கரையோரம் ஒட்டி செல்வார்கள். இதே போல் இறந்த இரண்டு பேரும், கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்காததால், ஆடு, மாடுகளை, கிராமத்திலுள்ள ஏரிக்கரையோரம், மேய்சலுக்காக ஒட்டி சென்றுள்ளனர்.
அப்போது கடுமையான வெயிலால், ரூபிகா, தாகம் தீர்ப்பதற்காகவும், கைகால்களை கழுவதற்காக, ஏரிக்கரையோரம் இறங்கினார். அப்போது ரூபிகா நிலை தடுமாறி தண்ணீருக்குள் விழுந்தார். இதனை கரையிலிருந்த பார்த்து கொண்டிருந்த கௌசிகா, தனது உயிர் தோழி, தண்ணீருக்குள் முழ்குவதை பார்த்ததும், ஒடிச்சென்று, காப்பாற்ற முயன்றார். ஆனால் ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்ற போது, இருவரும் தண்ணீருக்குள் முழ்கி இறந்தனர். அப்போது கரையில், மாடுகளை மேய்த்து கொண்டிருந்தவர்கள், இரண்டு குழந்தைகள், ஏரிக்கு சென்றவர்கள் திரும்பி வரவில்லை என்று பார்த்த போது, இருவரும், தண்ணீருக்குள் முழ்கி இறந்து கிடந்தனர்.
ரூபிகாவும், கௌசிகாவும் ஒரே தெரு, ஒரே பள்ளி, ஒரே வகுப்பில் படித்த வந்தனர். இருவரும் அருகருகே வீடு இருப்பதால், நெருங்கிய தோழியாக இருந்து வந்தனர். தனது உயிர் தோழி, முழ்கினால் இறந்து போவார் என்று தெரிந்தும், காப்பாற்றிவிடமாட்டோமா என்று, கரையில் இருந்தவர்களை யாரும் அழைக்காமல், ஒடி சென்ற காப்பாற்ற சென்று, இறந்த தோழிகள் இருவரும் இறந்தது மிகவும் வேதனையான விஷயமாகும். எனவே, தமிழக அரசு, இரண்டு சிறுமிகளின் குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.