969 வீடுகள்... மெதுவா... மெதுவா நடக்கும் பணிகள்... எப்போ முடியும்..? - புலம்பும் மக்கள்
அடுக்குமாடி குடியிருப்புகள் வல்லம் - மருத்துவக்கல்லூரி சாலையில் மேம்பாலத்திற்கு அருகில் கட்டப்படுகிறது. இதில் 969 வீடுகள் இந்த குடியிருப்பு வளாகத்தில் கட்டப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்பில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டுமானப்பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை அருகே வல்லம் – மருத்துவக்கல்லூரி சாலையில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திருச்சி கோட்டம், தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளைதான் விரைவுப்படுத்த வேண்டும் என்று பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிசை மாற்று வாரியம் என்பதை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்த வாரியத்தின் திருச்சி கோட்டம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் தஞ்சை அருகே வல்லத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வல்லம் – மருத்துவக்கல்லூரி சாலையில் மேம்பாலத்திற்கு அருகில் கட்டப்படுகிறது. இதில் மொத்தம் எத்தனை வீடுகள் என்று தெரியுங்களா? 969 வீடுகள் இந்த குடியிருப்பு வளாகத்தில் கட்டப்படுகிறது.

அப்போ இதோட மதிப்பு... ரூ.149.32 கோடி மதிப்பில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. 24 மாதத்தில் இந்த குடியிருப்பு வீடுகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதுதான் பயனாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நேரத்திற்கு முடிச்சு கொடுத்தாதானே நாங்க பயன் அடைய முடியும் என்று பயனாளிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் நடந்து வந்தாலும் காலதாமதம் ஆவதால் பயனாளிகள் தரப்பில் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே பயனாளிகள் தேர்வு நடந்துள்ள நிலையில் இன்னும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தால் எப்படிங்க என்றும் கேள்வி எழுப்புகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து இந்த அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கணும். பணிகள் முடிந்த உடனேயே பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
அழகாக அட்டகாசமாக உருவாகி வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வண்ண மயமாக ஜொலிக்கிறது. இருந்தும் என்ன பிரயோசனம். பயனாளிகளுக்கு நேரத்தில் கிடைத்தால்தானே என்றும் கேள்வி எழுகிறது. இது ஒரு பக்கம் என்றால் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வைத்து மோசடி பேர்வழிகள் மக்களிடம் எவ்வித முறைகேடுகளும் செய்து விடக்கூடாது என்று வாரியம் சார்பில் ஒரு அறிவிப்பு வைத்துள்ளனர்.
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பணிகள் நடக்கும் பகுதியில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளுக்கான பயனாளிகள் கடந்த 2021ம் ஆண்டே மாவட்ட கலெக்டர் மற்றும் வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனால் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். மற்றவர்களுக்கு வீடுகள் கண்டிப்பாக ஒதுக்கீடு செய்ய இயலாது.
இத்திட்டத்தில் வீடு வாங்கி தருவதாக கூறும் 3ம் நபர்களையோ அல்லது இடைத்தரகர்களையோ, வாரியத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாற்றும் தனிநபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். எனவே கவனமா இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்னும் பணிகள் நடந்து வருவதால் அதிருப்தி நிலைதான் நிலவுகிறது.





















