தஞ்சாவூர்: காலியாக உள்ள 52 உள்ளாட்சி இடங்களுக்கு அக்.6, 9 ஆம் தேதிகளில் தேர்தல்
’’இறப்புக் காரணமாக 49 பதவிகளுக்கும், பதவி விலகல் காரணமாக ஒரு பதவிக்கும், கடந்த முறை தேர்தலின்போது வேட்பு மனு தாக்கல் செய்யப்படாதன் காரணமாக காலியாக இருக்கும் 2 பதவிகளுக்கும் தேர்தல்'’
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர். 6, 9 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மற்ற மாவட்டங்களில் காலியாகவுள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலும் நடத்தப்படுகிறது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகத்தில் காலியாகவுள்ள 52 பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், உறுப்பினர்கள் இறப்புக் காரணமாக 49 பதவிகளுக்கும், பதவி விலகல் காரணமாக ஒரு பதவிக்கும், கடந்த முறை தேர்தலின்போது வேட்பு மனு தாக்கல் செய்யப்படாதன் காரணமாக காலியாக இருக்கும் 2 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழுவில் 16 ஆவது வார்டு (அம்மாபேட்டை பகுதி), கும்பகோணம் ஒன்றியத்தில் 24-ஆவது வார்டு, ஒரத்தநாடு ஒன்றியத்தில் ஒன்றாவது வார்டு ஆகியவற்றில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோல, பட்டுக்கோட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட த.மரவக்காடு, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பள்ளத்தூர், திருவையாறு ஒன்றியம் வளப்பக்குடி, வெங்கடசமுத்திரம், திருவிடைமருதூர் ஒன்றியம் விளங்குடி, திருவோணம் ஒன்றியம் அதம்பை ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
மேலும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் பட்டுக்கோட்டை, பூதலூர், பாபநாசம், திருவையாறு ஆகிய ஒன்றியங்களில் தலா ஒரு பதவிக்கும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 2 பதவிகளுக்கும், மதுக்கூர் ஒன்றியத்தில் 3 பதவிகளுக்கும், அம்மாபேட்டை, கும்பகோணம் ஒன்றியங்களில் தலா 4 பதவிகளுக்கும், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூர், ஒரத்தநாடு ஒன்றியங்களில் தலா 5 பதவிகளுக்கும், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் 6 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றைய தினம் தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 23ஆம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளது. திரும்பப் பெறுவதற்கான தேதி செப்டம்பர் 25ஆம் தேதி, வாக்குப் பதிவு அக்டோபர் 9ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவி, ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி, ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆகியவற்றுக்கு தொடர்புடைய ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என ஆட்சியரக அலுவலர்கள் தெரிவித்தனர்.