கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பெண் கவுன்சிலரின் கணவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகராட்சி பெண் கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகராட்சி பெண் கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
சோதனை நடத்த கோர்ட் அனுமதி
கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (41). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர். இவரது மனைவி ரூபின்ஷா. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர். இந்நிலையில் அலெக்ஸ் வீட்டில் கத்தி, அரிவாள் உட்பட பல பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக கும்பகோணம் மேற்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் அலெக்சின் மனைவி மாநகராட்சி கவுன்சிலர் என்பதால் அவரது வீட்டில் சோதனை செய்ய அனுமதி கோரி கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். சோதனை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.
கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்தவர்கள்
இதையடுத்து கும்பகோணம் மேற்கு போலீசார் அலெக்ஸ் வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் ஒரு அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் 4 பேர் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கெயில் ஆண்டனி(22), அர்னால்டு ஆண்டனி(23), அருண்குமார்(21), பால்சாமி(23) என்பதும், கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் இங்கு பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.
ஆயுதங்களும் பறிமுதல்
இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் கட்டிலுக்கு அடியில் சோதனை செய்த போது, அங்கு 10-க்கும் மேற்பட்ட கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாலும் அலெக்ஸ் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளதால் போலீசார் அவரை கைது செய்ய தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த அலெக்சை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் உத்தரவிட்டார்.
தலைமறைவான கவுன்சிலரின் கணவர் கைது
தொடர்ந்து டிஎஸ்பி., கீர்த்திவாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அலெக்ஸ் உறவினர்கள் மற்றும் நண்பர்களை கண்காணித்து வந்தனர். அப்போது கும்பகோணம் உழவர் சந்தை அருகே ஓர் இடத்தில் அலெக்ஸ் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அலெக்சை கைது செய்தனர்.