அரிசி ஆலை உரிமையாளரிடம் இணையவழியில் ரூ.2 கோடி மோசடி - கேரள இளைஞர் கைது
கும்பகோணத்தில் அரிசி ஆலை வைத்துள்ளவரை இணைய வழியில் ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த நபர் கைது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரிசி ஆலை வைத்துள்ளவரை இணைய வழியில் ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மற்றொருவரை தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அரிசிஆலை உரிமையாளர். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம் என்று இருந்துள்ளது. தொடர்ந்து அதில் இருந்த லிங்க் உள்ளே சென்றபோது அதன் முலம் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் மனுதாரருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்யும்படி மர்ம நபர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த விலையில் பங்குகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து பல மடங்கு லாபம் பெற்றுத் தருவதாக மர்மநபர்கள் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய புகார்தாரர் பல்வேறு தவணைகளில் மர்மநபர்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய பல்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.2 கோடி செலுத்தி உள்ளார். ஆனால் அதற்கு பிறகு புகார்தாரரால் அந்த மர்மநபர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. இதையடுத்து அரிசி ஆலை உரிமையாளருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து கும்பகோணத்தை சேர்ந்த அந்த அரிசி ஆலை உரிமையாளர் தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கடந்த 09.07.2024 ம் தேதி புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் புகார்தாரர் இழந்த பணத்தில் ரூ. 25 லட்சம் சபு என்ற பெயரில் உள்ள கேரளா நெடுமாங்காடு பகுதியை சேர்ந்த ஒரு வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டு மேற்படி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6.40 லட்சம், அதே சபு என்ற பெயரில் உள்ள கனரா வங்கிக் கணக்கிலிருந்து காசோலை மூலம் எடுக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 16.07.2024 ம் தேதி தஞ்சாவூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின், ஏட்டு இளையராஜா, ஜெகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கேரளா சென்று சம்பந்தப்பட்ட நெடுமாங்காடு சகாபுதீன் என்பவரின் மகன் சபு என்பவரை கைது செய்து தஞ்சாவூர் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட எதிரி சபுவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், புலன் விசாரணையின் பேரிலும் கடந்த 7.8.2024ம் தேதி இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான வழக்கின் மற்றொரு எதிரியான கேரளா திருவனந்தபுரம் முனானங்குடி பகுதியை சேர்ந்த நசீர் என்பவரின் மகன் பைசல் என்பவரையும் கைது செய்து தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் கைதான பைசல் பொதுமக்களிடம் தற்போது ஷேர்மார்க்கெட் முதலீடு தொடர்பான ஆர்வம் அதிகரித்து வருவதால் சமுக வலைதளங்கள் மூலம் போலியான விளம்பரங்களை கொடுத்து பொதுமக்களிடம் பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. எதிரி பொதுமக்களிடம் தங்களது அடையாளத்தை மறைத்து VPN தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப் எண்கள் உருவாக்கியுள்ளதும் தெரிய வருகிறது.
பொதுமக்களிடம் ஏமாற்றும் பணத்தை விவரம் தெரியாத பல்வேறு அப்பாவி பொதுமக்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்து பயன்படுத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதேபோன்று வேறு நபர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், இதுபோன்ற அடையாளம் தெரியாத நபர்கள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் கூறும் ஷேர் மார்க்கெட் முதலீடு தொடர்பான போலியான வாக்குறுதிகள் மற்றும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். என்று தெரிவித்துள்ளனர்.