95 வயது பாட்டியை எரித்து கொன்றாரா பேரன்? - அன்னியன் படத்தை விஞ்சும் நிஜ சம்பவம்
’’15 வருடங்களாக கூலி வேலை செய்து பாட்டியை பராமரித்து வந்த அஜித் குமார் இப்படி செய்திருப்பாரா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்’’
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டியான செல்லம்மாள் (95). இவரது மகள் தனலெட்சுமி, மருமகன் பழனிவேல். இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். இவர்களது ஒரே மகன் அஜித்குமார் (26) இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கூலி வேலை செய்து கொண்டு வரும் அஜித்குமார். இவர் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். செல்லம்மாள் பாட்டிக்கு வயது முதிர்வின் காரணமாகவும், வாதநோயால் கைகால்கள் செயலிழந்த நிலையில், படுத்த படுக்கையாக இருந்த செல்லம்மாள் பாட்டிக்கு அஜித்குமார் தான் கடந்த பல ஆண்டுகளாகவே, உணவு ஊட்டுதல், இயற்கை உபாதைகள் வந்தால் சுத்தம் செய்வது என பணிவிடைகள் செய்து கொண்டு குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனால் மனவேதனையிலும், தனிமை, துணைக்கு யாரும் இல்லாததால், கடந்த சில மாதங்களாகவே குடிபோதைக்கு அடிமையான அஜித்குமார் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல இருந்துள்ளார்.
இந்நிலையில், அவரது வீட்டின் முன்பு, 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மில் செல்லம்மாள் பாட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதனுடன் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டு வந்த நாய் மற்றும் குட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது, வீட்டில் இருந்த மளிகை பொருட்கள், அஜித் குமாரின் ஆடைகள், பாட்டியின் சேலை அனைத்தும் தீ வைக்கப்பட்டு மொத்தமாக எரிந்து கிடந்தது. இதனையறிந்த அருகிலுள்ளர்கள் பார்த்த போது, மூதாட்டி மற்றும் 2 நாய்கள் எரித்து கொன்று இருப்பது தெரிய வந்தது. உடனே, அப்பகுதியினர், இது குறித்து பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக் கண்ணன், பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், தஞ்சாவூரில் இருந்து தடய அறிவியல் துறை ஆய்வாளர் ராசேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தார். காவல்துறையினர் அஜித்குமாரிடம் நடத்திய விசாரணையில், பாட்டி செல்லம்மாள் கடந்த 4 நாட்களாக தனக்கு சோறு தண்ணி தராமல் படுத்தே இருந்ததால் அரிசியை சாப்பிட்டு வந்ததாகவும், அதனால் அவரை எரித்துக் கொன்றதாகவும், வேலைக்கு போய்விட்டு வந்தேன். பாட்டி இறந்து கிடந்தது. சாமி கிட்ட கேட்டேன். எதையும் வைக்காமல் எரித்துவிடு என்றது. அதனால் வீட்டிலுள்ள எல்லா பொருளையும் பாட்டியோடு போட்டு எரித்து விட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
அதே தொடர்ந்து சிறிது நேரத்தில் போலீசாரிடம், சார் என்ன சார் நடந்தது, எப்படி என் பாட்டி இறந்தாங்க, என்று கேட்டு அவர்களை திணற வைத்திருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால், காவல்துறையினர் அவரை பேராவூரணி காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கிராமத்தினர் 15 வருடங்களாக கூலி வேலை செய்து பாட்டியை பராமரித்து வந்த அஜித் குமார் இப்படி செய்திருப்பாரா எனவும் கேள்வி எழுப்புகின்றனர். அந்நியன் படத்தை மிஞ்சும் அளவிற்கு சம்பவம் நடந்திருப்பதால், போலீசார் என்ன நடவடிக்கை எடுப்பதென புரியாமல், உள்ளனர்.