தஞ்சை: பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க 50 சதவீத மானியம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தஞ்சாவூர்: பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க 50 சதவீத மானியம் அளிக்கப்படும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க 50 சதவீத மானியம் அளிக்கப்படும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கப்படுமென சட்டசபை கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி தஞ்சை மாவட்டத்தில் பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பை ஊக்குவிக்க மானியம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
திட்டத்தின் சிறப்புகள் :
ஒவ்வொரு விவசாயிக்கும் உதவும் உத்திதான் பண்ணைக்குட்டை அமைத்தல். குறிப்பாக பண்ணை குட்டைகள், மானாவாரி பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகரித்திடவும், கிணற்றிலும், ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மேலே வர உதவுவது கண் கூடு. பண்ணைக்குட்டைகள், மழை நீரை சேமிக்க மட்டுமல்லாது ஏராளமான பயன்களை அளிக்கிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்து விவசாயத்தில் சாதனை படைக்கலாம்.
இயற்கையின் சவாலை சந்திக்கும் உத்திகளில் மிகவும் எளிய முறை பண்ணைக்குட்டைக்கு உண்டு. மழைநீரை சேமிக்க குளங்கள் வெட்டுதல், சம உயர வரப்பு வெட்டுதல், கசிவு நீர் குட்டை அமைத்தல், திருப்பணை கட்டுதல், பாத்திகள் போன்ற பல வகையான உத்திகள் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகச்சிறந்ததும் எளிய முறையில் நீரை சேமித்து முழுப்பலனை அளிக்கக்கூடியதாகவும் இருப்பது பண்ணைக்குட்டைகள் மட்டுமே. மழைக்காலங்களில் பெறப்படும் 30 சதவிகிதத்திற்கு மேலான மழை நீர் வழிந்தோடி ஆற்றிலும், பின் கடலிலும் கலந்து வீணாகிறது. பண்ணைக் குட்டைகள் அமைப்பதால் மழை நீரானது வீணாவது தடுக்கப்படுகிறது. பண்ணைக்குட்டைகள் அமைப்பதால் நிலத்தில் விழும் ஒவ்வொரு மழை துளியும் வழிந்தோடி வீணாகாமல் இருக்க உதவுகிறது.
இத்தகைய பயன்கள் உள்ள பண்ணைக்குட்டைகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றன. இதில் மீன்வளர்ப்பை மேற்கொள்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் 250 முதல் 1000 சதுர மீட்டர் அளவில் உள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன் குஞ்சு, மீன் தீவனம், உரங்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகியவை என ஒரு அளவிற்கு ஆகும் செலவினும் ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ஒரு பண்ணை குட்டைக்கு ரூ.18000 வழங்கப்படும்.
இந்த மானியமானது பின்னிருப்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் தஞ்சை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்