இன்னைக்கு இல்ல என்றைக்கும் நான்தான் கிங்.. கலையம்சம் நிரம்பிய தஞ்சாவூர் கலைத்தட்டுகள்
வெளிநாட்டுக்கும் பறக்கும் நம்ம ஊரு மண்ணின் பெருமை, கலையின் சிறப்பம்சம் தஞ்சாவூர் கலைத்தட்டுக்கள் எப்படி உருவாகிறது தெரியுங்களா?
தஞ்சாவூர்: வெளிநாட்டுக்கும் பறக்கும் நம்ம ஊரு மண்ணின் பெருமை, கலையின் சிறப்பம்சம் தஞ்சாவூர் கலைத்தட்டுக்கள் எப்படி உருவாகிறது தெரியுங்களா?
கல், மண், மரம், உலோகத்திலும் கலையம்சம்
கல்லாக இருக்கட்டும், மண்ணாக இருக்கட்டும், மரமாக இருக்கட்டும், உலோக பொருளாக இருக்கட்டும். அனைத்து பொருட்களிலும் கலை நுணுக்கத்தை கொண்டு வந்த மண் என்றால் அது தஞ்சை மண்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கலைகளின் பிறப்பிடமும், கலைகளை வளர்த்த பெருமையும் தஞ்சைக்கே உரித்தானது. சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் தஞ்சைக்கு மற்றொரு சிறப்பு தஞ்சாவூர் கலைத்தட்டுக்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கருமை அடையாமல் அப்படியே இன்றுதான் தயாரிக்கப்பட்டது போல் இருக்கும் பெருமை தஞ்சாவூர் கலைத் தட்டுக்களையே சேரும்.
பரிசு கொடுக்கணுமா... வாங்கு கலைத்தட்டை
சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள், பிறந்தநாள் கொண்டுபவர்கள் என அனைவரும் பரிசு கொடுக்க முதலில் தேர்வு செய்வது தஞ்சாவூர் கலைத்தட்டுகளைதான். பிளாஸ்டிக்கா, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களா அட எது வந்தாலும் நான்தான் முடிசூடா மன்னன்... சாதாரண மன்னன் இல்லை மாமன்னன் என்று இன்றும்... இனி என்றென்றும் தன்னை உயர்த்திக் கொண்டே இருக்கும் அற்புத கலையம்சம் கொண்டவை இந்த தஞ்சாவூர் கலைத்தட்டுக்கள்.
இந்த தஞ்சாவூர் ஆர்ட் பிளேட் எனப்படும் கலைத்தட்டுக்கள் தமிழ்நாடு கலைத்திறன் வளர்ச்சிக்கழகம் எனப்படும் பூம்புகார் கலைப்பொருட்கள் விற்பனை நிலையம் வாயிலாக உருவாக்கப்படுகிறது. பல்வேறு தனியாரும் இதை தயாரிக்கின்றனர்.
18ம் நூற்றாண்டின் மத்தியில் வந்த கலைத்தட்டுகள்
18ம் நூற்றாண்டின் மத்தியில் இந்த கலைத்தட்டுக்கள் தஞ்சைக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த கலை எங்கிருந்து வந்தது என்று அறிந்து கொள்ள முடியவில்லை. இதை முழுவதும் வளர்த்தெடுத்தது தஞ்சைதான். அதனால்தான் தஞ்சை கலைத்தட்டுகள் என்றே கூறப்படுகிறது. மன்னர் காலத்தில் இவை பரிசு கொடுக்கவும், நினைவுப்பொருளாக வழங்கப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டில் அதாவது 1970ம் ஆண்டு வரை அதிகம் வெளிப்படாத இந்த கலையம்சம் பின்னர்தான் அதிகளவில் வெளியில் தெரிய ஆரம்பித்தது.
சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி
குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே செய்து வந்துள்ளனர். இந்த கலையை அனைவரும் கற்றுக் கொள்ள பூம்புகார் ஏற்பாடு செய்தது. சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இந்த கலைத்தட்டுக்கள் உருவாக்கும் விதத்தை மற்றவர்களும் அறிந்து கொள்ள உதவித் தொகையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்போது தஞ்சையில் இந்த கலைத்தட்டுகள் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கலைத்தட்டில் உருவான கடவுள் உருவங்கள்
இதில் கடவுள் உருவங்கள் அற்புதமாக செய்யப்படுகிறது. சுத்தமான வெள்ளியை கொண்டே இவை உருவாக்கப்படுகிறது. இதில் எவ்வித கலப்படமும் இருக்காது. காலத்திற்கு தக்க மாற்றம் வேண்டும் என்பதால் கம்பெனி லோகோ, நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் உருவங்கள் என பலவித உருவங்கள் வார்க்கப்படுகிறது.
புவிசார் குறியீடும் இருக்குங்க... கலைத்தட்டுக்கு!!!
பறவைகள், இயற்கை சார்ந்த உருவங்கள் என்றும் கலைத்தட்டுக்கள் உருவாக்கப்படுகிறது. தஞ்சை கலைத்தட்டுக்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு புவிசார் குறியீடும் வாங்கப்பட்டுள்ளது. தஞ்சையில் உருவாக்கப்படும் இந்த கலைத்தட்டுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த கலைத்தட்டுக்கள் எவ்வித இயந்திரங்களை வைத்தும் உருவாக்கப்படுவதில்லை என்பதுதான் முக்கியமான ஒன்று.
முழுக்க முழுக்க கை வேலைப்பாடுகள்தான்
முழுக்க முழுக்க கை வேலைப்பாடுகள்தான். நுணுக்கமாக இந்த கலை அம்சத்தை உருவாக்குகின்றனர். சுத்தமான வெள்ளி இங்கு பல்வேறு உருவமாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பணியும் முடிந்து பாலீஸ் செய்யப்படுகிறது. எவ்வித ரசாயனமும் பயன்படுத்தப்படுவதில்லை. புளி, பூந்திக்கொட்டை, கரித்தூள் போட்டு இந்த தஞ்சாவூர் கலைத்தட்டுகளை சுத்தம் செய்கின்றனர். சற்று நேரத்தில் அற்புதமான கலைவடிவம் உருவாகிறது.
ஏறக்குறைய 3 அடிஅளவுக்கும் தயாரிக்கிறாங்க
5 இன்ச் விட்டத்தில் ஆரம்பித்து அதிகபட்சமாக 36 இன்ச் விட்டம் (அதாவது ஏறக்குறைய 3 அடி அளவு) உள்ள கலைத்தட்டுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தஞ்சையில் இருந்து உலகம் முழுவதும் பல பகுதிகளுக்கு இந்த கலைத்தட்டுகள் பயணமாகிறது. கலைத்தட்டுக்களின் அழகினை கண்டு வியப்புறும் வெளிநாட்டினர் தேடி வந்து இவற்றை வாங்கி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.