(Source: ECI/ABP News/ABP Majha)
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் நாளை முதல் கலை நிகழ்ச்சி - பொதுமக்களுக்கு அழைப்பு
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கலைநிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கலைநிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் தென்னக பண்பாட்டு மையம் அமைந்துள்ளது. இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவாக்கிய மையம் ஆகும்.
அதேபோல் இந்தியாவில் பிற பகுதியான கலை, பண்பாடு ஆகியவற்றை இந்த தென்னக பண்பாட்டு மையத்திற்கு வரும் கலைஞர்கள் பரப்பி செல்வார்கள். நமது நாட்டின் கலை மட்டுமின்றி உலகில் உள்ள பராம்பரிய கலைகளை பரப்புவதற்காக தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்திற்கு தினந்தோறும் ஏராளமான கலைஞர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் கலைகளை கொண்ட நுழைவாயில் கதவுகள் பிரமிக்க வைக்கிறது. 3 ஆயிரம் கலைப்பொருட்கள் உள்ள கலைக்கூடம், கண்காட்சி கூடம், கலைக் கூடத்தில் இருந்த வர்ண ஓவியங்கள், கருங்கல் சிற்பங்கள், கண்ணாடி சிற்பங்கள், மைய மண்டபத்தில் இயற்கை வர்ணங்களால் வரையப்பட்டுள்ள கேரள முரல் ஓவியம் பார்க்க, பார்க்க திகட்டாத இனிப்பு போல் இருக்கிறது. இந்த ஒவியம் மகாபாரத ராமாயண இதிகாசக் கதைகளிலிருந்து வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அருமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த அற்புதமான சுற்றிப்பார்க்க சிறந்த இடமாக தென்னகப் பண்பாட்டு மையம் உள்ளது.
இந்நிலையில் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கலைநிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னகப் பண்பாட்டு மையம் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையில் அமைந்துள்ளது தென்னகப் பண்பாட்டு மையம். இந்திய அரசு, கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இம்மையம் கடந்த 1986ம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி துவங்கப்பட்டது.
இம்மையம் கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளையும் பாதுகாத்து வருகின்றன. இக்கலைகளை பொதுமக்கள் நேரில் கண்டு களிக்கும் வகையில் இம்மையம் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
அதன் அடிப்படையில் தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் வாராந்திர நிகழ்ச்சி நாளை 19ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் பிரதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 8.30 மணிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியானது உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கலைகளை பாதுகாக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் பொதுமக்கள் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு திரளாக வருகைதந்து இந்த கலைநிகழ்ச்சிகளை கண்டு களிக்க வேண்டும். இதற்கு அனுமதி இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.