எதிரிகள் கண்ணில் மண்ணை தூவிய தஞ்சை ஆயுத கோபுரம் பற்றி தெரியுங்களா?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தக் கட்டடத்துக்கு ஆர்செனல் டவர் (ஆயுத கோபுரம்) என பெயர் மாறியதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் இங்கிருந்த துப்பாக்கி குண்டுகள் திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: கட்டிடக்கலையில் நம் முன்னோர்கள் மிக்க சிறந்து விளங்கினர். அதுமட்டுமா எதிரிகளை ஏமாற்றும் விதத்தில் ஆயுதங்களை குவித்து வைக்கும் விதத்தில் கட்டிடக்கலையை பயன்படுத்தி உள்ளனர் என்பது தெரியுங்களா? அட ஆமாங்க. இது எங்கேயோ இல்லை. தஞ்சையில்தான் இன்றும் உள்ளது. அது என்ன என்கிறீர்களா?
தஞ்சாவூர் என்றாலே பிரமாண்டமாக நினைவுக்கு வருவது பெரிய கோயில்தான். உலக புகழ் பெற்று விளங்கும், கட்டிடக்கலைக்கு அற்புதமான எடுத்துக்காட்டாக இன்றும் நிலைத்து நிற்கும் பெரிய கோயிலுக்கு அடுத்ததாக சுற்றுலா பயணிகளைக் கவர்ந்த ஒரு இடம் என்றால் அது தஞ்சை அரண்மனைதான். பிற்காலத்தில் தஞ்சாவூருக்கு வந்த நாயக்கர்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனை முழுவதும் செங்கல், கருங்கல், சுண்ணாம்பு, மரம் போன்றவற்றால் கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டுகள் பல கடந்தாலும் கம்பீரமாக அனைவரையும் கவர்ந்து இழுத்து வரும் கட்டிட அமைப்பை கொண்டுள்ளது. அரண்மனை என்றால் மிகையில்லை.
இதில், 190 அடி உயரத்தில் 8 அடுக்குகளுடன் வானுயர்ந்து நிற்கும் ஆயுத கோபுரம் பார்வையாளர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாக உள்ளது. அப்படி இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? கோயில் கோபுர வடிவில் கட்டப்பட்டுள்ளதுதான் மிகவும் விசேஷம். இந்த மாளிகை நாயக்கர் காலத்தில் இந்திரா மந்திரம் என அழைக்கப்பட்டுள்ளது. கீழே அகலமாகவும், மேலே செல்ல, செல்ல குறுகலாகவும் கோயில் கோபுரம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. செங்கற்கள், சுண்ணாம்பு கலவையைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் நாயக்கர் கால கட்டடக்கலையான வளைவுகள், அழகிய பூ வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டு இப்போதும் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.
இதேபோல, உச்சியைச் சென்றடைவதற்கு ஒவ்வொரு அடுக்கிலும் படிக்கட்டுகள் உள்ளன. அக்காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுக்கும் மன்னர்களிடம், அங்குள்ள கோயில்களைத் தாக்கும் பழக்கம் இருக்காது. கடவுளின் இடத்தை சேதப்படுத்தமாட்டார்கள். எனவே, எதிரிகளிடையே இது கோயில் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அவர்களைத் திசை திருப்புவதற்காக அரண்மனை வளாகத்தில் கோபுர வடிவில் இந்த இந்திரா மந்திரம் கட்டப்பட்டிருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
மேலும், தஞ்சாவூர் மீது எதிரிகள் படையெடுத்து வருகின்றனரா என்பதைக் கண்காணிப்பதற்கும் இந்தக் கோபுர கட்டடம் பயன்படுத்தப்பட்டதாம். இந்தக் கோபுரத்தின் கீழ் படை வீரர்களுக்கான போர்க்கருவிகள் குவிக்கப்பட்டிருந்தன. எதிரிகள் படையெடுத்து வரும்போது ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஆயுத கோபுரத்துக்கும், மணிக் கோபுரத்துக்கும் இடையிலுள்ள தர்பார் கூடமும் உள்ளது.
பின்னாளில் மராட்டியர்கள் படையெடுப்பால் விஜயராகவ நாயக்கர் மரணமடைந்த பிறகு இந்திரா மந்திரத்தில் ராணிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வந்த மராட்டியர்கள் அரண்மனையைப் புதுப்பித்து பராமரித்து வந்துள்ளனர். அப்போது, இந்த இந்திரா மந்திரமும் பராமரிக்கப்பட்டுள்ளது. மராட்டியர் காலத்திலும் இந்திரா மந்திரத்தில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மராட்டியர்களுக்கு பிறகு வந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியிலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆயுதங்களும் இந்த இந்திரா மந்திரத்தில் இடம்பெற்றன. எனவே, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தக் கட்டடத்துக்கு ஆர்செனல் டவர் (ஆயுத கோபுரம்) என பெயர் மாறியதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் இங்கிருந்த துப்பாக்கி குண்டுகள் திருச்சி ஆயுதப்படைக்குக் கொண்டு செல்லப்பட்டதாம்.
அரண்மனை வளாகத்திலுள்ள ஆயுத கோபுரம், மணிக் கோபுரம், தர்பார் கூடம், கலைக்கூடம் ஆகியவை அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகின்றன. ஆயுத கோபுரத்தின் முதல் அடுக்கில் வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய பழங்கால திமிங்கலத்தின் 92 அடி நீள எலும்புக்கூடு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய திமிங்கிலம் இருந்தது என்பதற்கு சாட்சியாக இன்னும் இந்த எலும்புக்கூடு உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கண்டறியப்பட்ட பழங்காலக் கற்சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. எல்லோரையும் கவரும் மிக உயரமான ஆயுத கோபுரம் புனரமைக்கப்படாமல் பறவைகளின் எச்சம் மற்றும் மழையால் பாசி படர்ந்தும், செடிகள் முளைத்தும் பொலிவிழந்து வந்தது. இதனால், இந்தக் கோபுரத்தைப் புதுப்பிக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த ஆயுத கோபுரம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
ஆயுத கோபுரம் புதுப்பிக்கும் பணி ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது. ஏற்கெனவே எப்படி இருந்ததோ, அந்தப் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில், கோபுரத்தின் வெளிப்புறம் பாசி, பறவைகளின் எச்சத்தை நீக்கிவிட்டு, பழமை மாறாமல் வர்ணம் பூசப்பட்டது. இதேபோல, உள்புறமும் தூய்மைப்படுத்தப்பட்டு, வர்ணம் பூசப்பட்டுள்ளது. இப்போது மட்டுமல்ல எப்போதும் நம் முன்னோர்களின் அற்புதமாக கட்டுமானங்கள் வெளிநாட்டினரையும் அசரடிக்கிறது என்பதற்கு ஆயுத கோபுரம் ஒரு உதாரணம்.