தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் பணிகள் நிறைவு பெறாததால் நீச்சல் குளம் வீரர்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் பணிகள் நிறைவு பெறாததால் நீச்சல் குளம் வீரர்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்து நீச்சல்குளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கமான அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், வாலிபால் மைதானம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும் இங்கு நவீன உள் விளையாட்டரங்கம், டென்னிஸ் அரங்கம், இறகுப்பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவையும் உள்ளன.
இது தவிர நவீன சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு கைப்பந்து விளையாட்டு விடுதியும் இதன் அருகிலேயே செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்த விளையாட்டு அரங்கத்தில் குந்தவை நீச்சல் குளமும் இயங்கி வந்தது. இந்த குளத்தை புனரமைக்க வேண்டும் என்று விளையாட்டு மற்றும் நீச்சல் வீரர்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து 25 மீட்டர் நீளமும் 13 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நீச்சல் குளத்தை நவீன முறையில் புனரமைத்து சர்வதேச அளவில் மிகப்பெரிய உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இந்த நீச்சல் குளத்தின் தரை தளத்தை சீரமைப்பதோடு, சுற்றிலும் பக்கவாட்டை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.50 லட்சம் செலவில் இந்த குளத்தை சர்வதேச அளவிலான நீச்சல் குளமாக தரம் உயர்த்தும் பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.
நீச்சல் குளத்தின் ஒரு பகுதி அடிஆழமும் மறுபுறம் 5 அடி ஆழமும் இருந்தது. தற்போது 1 அடி வரை ஆழம் அதிகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நீச்சல் குளத்தின் தரைதளத்தில் டைல்ஸ் பதிக்கப்பட்டு, பக்கவாட்டிலும் உயர்த்தப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் நீச்சல் குளத்திற்குள் இறங்குவதற்கான படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் மற்றும் நான்கு புறமும் தண்ணீர் வழிந்தோடுவதற்கான வசதி உள்ளிட்ட பணிகள் நடைபெற வேண்டும்.
75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்னும் 25 சதவீத பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. 2 மாதங்களில் பணிகளை முடிக்கும் வகையில் தொடங்கப்பட்டு தற்போது 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் பணிகள் நிறைவடையவில்லை. ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் வழக்கமாக நடத்தப்படும் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடத்த முடியவில்லை.
மேலும் நீச்சல் போட்டிகள் நடத்தப்படவில்லை. நீச்சல் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளும் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே நீச்சல் குள பணிகளை விரைந்து முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆமை வேகத்தில் பணிகள் நடை பெறுவதால் நீச்சல்குளம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் 5 மாதங்களுக்கும் மேல் பயிற்சி பெற முடியாமல் நீச்சல் வீரர்கள் தவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.