தஞ்சையில் பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய வாகனம் - 5 பேரின் உயிரை எடுத்த விபத்திற்கு காரணம் என்ன?
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடியில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதியதில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடி பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதியதில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ஓட்டுநர் தூங்கி விட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பக்தர்கள் மீது மோதியுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிப்பட்டியை சேர்ந்தவர்கள் 60க்கும் அதிகமானோர் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்காக பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டு இருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி பகுதியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மோதி விபத்து
அப்போது பின்புறமாக வேகமாக வந்த மினிலாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் சின்னையன் மகன் முத்துசாமி (60), கார்த்திக் மனைவி மீனா (26), முருகன் மனைவி ராணி (37), மோகனாம்பாள் (27) ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் கவியரசன் மனைவி சங்கீதா (27), செல்வராஜ் மனைவி தனலட்சுமி (36) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
செங்கிப்பட்டி போலீசார் விசாரணை
தகவலறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துசாமி உட்பட 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுனர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சௌந்தரராஜன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் இரவு கரூரில் இருந்து மினி லாரியில் அரிசி மூட்டை ஏற்றி வந்து இறக்கிவிட்டு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மினி லாரி ஓட்டுனர் அசதியில் வண்டி ஓட்டும் போது தூங்கி விட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பக்தர்கள் மீது மோதியுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் நேரில் ஆய்வு
தகவலறிந்து சம்பவ இடத்தை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத், டி.எஸ்.பி.க்கள் நித்யா, ராமதாஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதற்கிடையில் இந்த விபத்து காயமடைந்த தனலட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதனால் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. காயமடைந்த சங்கீதா தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.