கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதிய லாரி .. 2 வாலிபர்கள் பலி
தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் வந்து லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவர் மீது வேகமாக மோதியது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். டிரைவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஜெகன்மோகன் நகரை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் காளிராஜ் (26 ). தஞ்சை பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் அருண்குமார் (22), ஒரத்தநாடு தாலுகா மருங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சதீஷ் கண்ணன் (40).
இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து பிராய்லர் கோழிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்தனர். பின்னர் அந்த கோழிகளை தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டனர். லாரியை டிரைவர் சதீஷ் கண்ணன் ஓட்டி வந்தார். அவர் அருகில் காளிராஜ், அருண்குமார் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
நேற்று தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் வந்து லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காளிராஜ், அருண்குமார் இருவரும் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். டிரைவர் சதீஷ் கண்ணன் பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சதீஷ் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான காளிராஜ், அருண்குமார் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





















