தஞ்சையில் மகளிர் குழுவினரின் குளியல் சோப் விற்பனை தொடக்கம்
தஞ்சை மாவட்டம் ஆழிவாய்க்கால் பகுதியில் மகளிர் குழுவினர் இணைந்து சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விற்பனை தொடக்க விழா நடந்தது.
தஞ்சை மாவட்டம் ஆழிவாய்க்கால் பகுதியில் மகளிர் குழுவினர் இணைந்து சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விற்பனை தொடக்க விழா நடந்தது.
சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், கிராம மட்டத்தில் 10-20 பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுக்களாகும். இந்தக் குழுக்களுக்கு சுழல்நிதி கடன்,பொருளாதார கடன், வங்கிக் கடன்கள் வழங்கப்படுகிறது. ஆணுக்கு நிகராகப் பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறுவதற்கு கல்வி ஒரு கருவியாக இருந்து வருகிறது.
எனினும், கல்வி அறிவைப் பெறாத கிராமப்புற பெண்களும் சிறந்த தொழில் முனைவோராக இன்றைக்குப் பல்வேறு தளங்களில் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு ஊன்றுகோலாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன என்றால் மிகையில்லை. மகளிர் சுய உதவிக்குழுவினர் இன்று பல்வேறு தொழில்களிலும் முன்னேற்றம் அடைந்து தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டு வருகின்றனர்.
அவசர பணத் தேவைக்கு ஒருவரையும் எதிர்ப்பார்க்க முடியாது. கணவனாக இருந்தாலும் சரி, பிள்ளைகளாக இருந்தாலும் சரி ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர்களிடம் அடிக்கடி சென்று குடும்ப செலவுகளுக்கோ, தங்களது தேவைகளை பூர்த்தி செய்யவும், மருத்துவ செலவுகளுக்கோ பணம் கேட்கும் நிலையை மகளிர் குழு மாற்றி உள்ளது. மகளிருக்கு தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் அளவில் பொருளாதாரத்தை உயர்த்துக் கொள்ள மகளிர் குழுகள் உறுதுணையாக உள்ளன.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஆழிவாய்க்கால் பகுதியில் மகளிர் குழுவினர் இணைந்து சுய தொழிலில் இறங்கி உள்ளனர். இதன்படி குளியல் சோப் தயாரிப்பு பணியில் இயற்கை முறையில் செய்துவருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஆழிவாய்க்கால் கதிரவன் மலர் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் தயாரிக்கப்பட்ட சோப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
ஆழிவாய்க்கால் பகுதியில் 24 பெண்கள் கொண்ட கதிரவன் மற்றும் மலர் மகளிர் சுய உதவி குழுவினர் வாயிலாக சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மகளிர் சுய உதவிக்குழுவினர் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, பினாயில், ஊறுகாய் போன்ற தொழில்கள் மட்டும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழுவினர் குளியல் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மகளிர் உதவி குழுவினர் ஆறு இயந்திரங்கள் கொண்டு தாவரங்கள், மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட மூலப்பொருட்கள் மூலம் சந்தனம், கற்றாழை, வேப்பிலை, ரோஜா என நான்கு வகையான குளியல் சோப்புகளை தயாரிக்கின்றனர். இந்த இயந்திரங்கள் மாதத்துக்கு ஒரு லட்சம் சோப்புகள் தயாரிப்பதற்கான திறன் கொண்டது . பொதுமக்களிடம் இந்த சோப்பிற்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழு தலைவர்கள் சீதாலட்சுமி, ஒன்றிய குழு தலைவர் பார்வதி சிவசங்கர், சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.