தஞ்சாவூரில் ஒரே நாளில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கல்
தஞ்சாவூரில் ஒரே நாளில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா, பணியிட மாறுதலில் விடைபெற்று செல்லும் மாவட்ட கலெக்டருக்கு வாழ்த்தி வழியனுப்பும் விழா ஆகியவை நடந்தது.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒரே நாளில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா, பணியிட மாறுதலில் விடைபெற்று செல்லும் மாவட்ட கலெக்டருக்கு வாழ்த்தி வழியனுப்பும் விழா ஆகியவை நடந்தது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 2 ஆண்டுகளில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். கலெக்டர்ன்னா இவருதான். இரண்டு வருசம் தான் தஞ்சை கலெக்டராக இருந்தார். இந்த இரண்டு வருடங்களில் பல விஷயங்களை செய்துள்ளார் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
தமிழ்நாட்டில் பல மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் அவ்வப்போது மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அதுபோல் தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்ட கலெக்டராக கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாள் முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல விஷயங்கள் செய்தார். ஏழை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, கும்பகோணம், பேராவூரணி , செங்கிப்பட்டி போன்ற பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியும், அதில் வீடு கட்டி, சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து, அதற்கு செந்தமிழ் நகர் என பெயர்சூட்டி அவர்களுக்கு வீடுகளை வழங்கி உள்ளார் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்.
அதுமட்டுமின்றி தஞ்சை மாவட்டத்தில் நஞ்சையில் உளுந்து என்ற சிறப்பான திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதிகபட்ச உளுந்து சாகுபடிக்கு வழிவகை செய்தார்.
அந்த வகையில் ஒரே நாளில் 1000 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:
இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு இந்நிகழ்ச்சியே சாட்சி. இந்த முழுப் பொறுப்புக்குக் காரணமானவர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். தமிழக முதல்வரின் எண்ணங்களைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்.
அவர் மாவட்ட கலெக்டராக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் காது கொடுத்துக் கேட்டு நிறைவேற்றியவர். விளம்பு நிலை மக்களுக்குச் செந்தமிழ் நகர் என்ற பெயரில் குடியிருப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். இதேபோல, வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார். இதேபோல, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளார் கலெக்டர். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இவை அனைத்தும் கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், எம்.எச். ஜவாஹிருல்லா, கூடுதல் கலெக்டர்கள் என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.