தஞ்சை மாவட்டத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை முகாம்
தஞ்சை மாவட்டத்தில் 100க்கும் அதிகமான இடங்களில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 100க்கும் அதிகமான இடங்களில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை முகாம் நடந்தது.
தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம் வழிகாட்டுதலின் பேரில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடந்தது.
தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி, கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இது தவிர ஒவ்வொரு வட்டாரங்களிலும் 14 நடமாடும் குழுக்கள் மூலமும் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
பொது சுகாதார துறை மூலம் ஏராளமான களப்பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் 28 குழுக்கள் பிரிந்து சென்று குழந்தைகள், மாணவ- மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.
தஞ்சை மாநகராட்சியில் 210 களப்பணியாளர்களும், கும்பகோணம் மாநகராட்சி பட்டுக்கோட்டை நகராட்சியில் தலா 60 களப்பணியாளர்களும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 20 களப்பணியாளர்களும் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு பரிசோதனை செய்தனர். இதில் காய்ச்சல் அறிகுறி தென்படுபவர்களை அருகில் உள்ள முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.
தஞ்சை அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சியில் குழந்தைகள் மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் ஏற்பாட்டில் நடந்த முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மையத்தில் குழந்தைகள், பொது மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, உன்னி காய்ச்சல், லெப்டோ ஆகிய 5 வகையான காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு கும்பகோணத்தில் உள்ள மாவட்ட பொது சுகாதார ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் வந்தவுடன் காய்ச்சல் உள்ளவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
முகாமில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் பாரதி, மாவட்ட மலேரியா அலுவலர் தையல்நாயகி, சுகாதார ஆய்வாளர் அருமைத்துறை ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தம்பி க. ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும். தேவையான அளவு மருந்து, மாத்திரைகள், கிருமி நாசினி கையிருப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் யாரும் மருத்துவர்கள் ஆலோசனை இன்றி மருந்து, மாத்திரைகளை வாங்க கூடாது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார் .