தஞ்சை: திட்டை ரயில்வே பாலத்தில் மழை நீர் நிரம்பியதால் போக்குவரத்து துண்டிப்பு - பொதுமக்கள் அவதி
''திட்டை ரயில் பாதையில், உயர்மட்ட மேம்பாலம் புதியதாக கட்டப்படும் 50 கோடி மதிப்பீட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை தகவல்'’
தஞ்சாவூர் மாவட்டம் திட்டை கிராமத்தின் வழியாக தஞ்சாவூர் கும்பகோணம் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. திட்டை பகுதியில் மிகவும் தாழ்வாக சாலை இருந்ததால், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. இதனால் ரயில்கள் மேலேயுள்ள தண்டவாளத்தில் சென்றாலும், கீழ் பாலம் வழியாக பஸ், கார், விவசாயி பொருட்களை மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் மூலம் கொண்டு சென்று வந்தனர். மேலும், திட்டை-தாராசுரம் சாலையில் ஏராளமான புராதன கோயில்கள் இருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வந்தது. அதன் பின்னர் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கீரிட்டினாலான பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால் அப்பாலம் மிகவும் தாழ்வாக இருப்பதால், லேசாக மழை பெய்தாலோ, பாலம் நிரம்பிவிடும். அப்போது, வாகன ஒட்டிகள் மாற்றுப்பாதையில் செல்வார்கள். பாதசாரிகள், ரயில் தண்டவாளத்தை கடந்து நடந்து மறுபுறம் செல்வார்கள். இது போன்ற நிலை பல ஆண்டுகளாக காலம் தொட்டு இருந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் பலத்த மழையினால், திட்டை ரயில் பாலத்தின் கீழ் மழை நிரம்பியது. சுமார் 4 அடி வரை மழை நீர் தேங்கி நிற்பதால், வாகன ஒட்டிகள்,கார், பஸ்,டிராக்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஒட்டிகள் ஒரு புறத்தில் நிறுத்தி விட்டு, மறுபுறம் சென்று, மற்றொரு வாகனத்தில் ஏறி சென்று வருகிறார்கள்.
அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இரண்டு நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அவதிக்குள்ளாகி சென்று வருகிறார்கள். பேருந்துகள் உரிய நேரத்திற்கு வராததால், பொது மக்கள், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் செல்வதற்காக சுமார் 5 கிரோ மீட்டர் துாரம் நடந்து சென்று பஸ்ஸில் ஏறி செல்கின்றார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம், திட்டை ரயில் பாலத்தில் வருடந்தோறும் இது போன்ற அவல நிலை நீடிப்பதால், நிரந்தரமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த நீதி கூறுகையில்,
தஞ்சாவூர் மாவட்டம், திருக்கருகாவூர், மெலட்டூர், அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினந்தோறும் பள்ளி, கல்லுாரிகளுக்கும், வேலைக்கும், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், திட்டை ரயில் பாலம் வழியாக தஞ்சாவூருக்கு சென்று வருகின்றார்கள். கிராமத்திலுள்ள பெரும்பாலானோர், ஏழ்மையில் இருப்பதால், அவர்கள், பஸ்சுகளில் சென்று வருவார்கள். திட்டை ரயில் பாலத்தின் கீழ் , வருடந்தோறும் மழை காலங்களில் பெய்து வரும் மழையினால், பாலம் நிரம்பி விடும்.அதனை தொடர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்படும். இது போன்ற சூழ்நிலையால், பல ஆண்டுகளாக அவதிக்குள்ளான நிலையில், பல்வேறு கட்சியினர், அமைச்சர்கள் வரை சென்று கோரிக்கை விடுத்தும் பலனில்லாமல் இருந்து வந்தது. அதன் பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் டீசல் மோட்டாரை நிரந்தரமாக வைத்து, தண்ணீர் நிரம்பினால், அகற்றுவதற்காக வைத்தனர்.
இந்நிலையில், திட்டை ரயில் பாலத்தின் கீழ் கடந்தசில நாட்களாக பெய்து வரும் மழையினால், தண்ணீர் நிரம்பியது. இதனையறிந்த நெடுஞ்சாலைத்துறையினர், உடனடியாக தண்ணீரை அகற்ற, அப்பகுதியில் வைக்கப்பட்ட டீசல் மோட்டார், மூலம் மழை நீர் அகற்ற முடிவு செய்து, மோட்டாரை ஆன் செய்த போது, மோட்டார் பழுதாகி நின்றது. இதனால் இரவு முழுவதும் பெய்த மழையினால், சுமார் 4 அடி வரை மழை நீர் தேங்கியது. அதன் பின்னர், நெடுஞ்சாலைத்துறையினர், தண்ணீர் நிரப்பும் லாரி மூலமும், பழுதாகியிருந்த மோட்டாரை சீர் செய்து, தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பள்ளி,கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் சுமார் 5 கிலோ மீட்டர் துாரமுள்ள திட்டை தஞ்சாவூர் பிரிவு சாலை வரை நடந்து சென்று, மற்றொரு பஸ்சுகளில் ஏறி சென்றனர். அதன்பிறகு அப்பகுதியினர், கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனால் தஞ்சாவூரிலிருந்து திட்டை ரயில் பாலம் வரை ஒரு அரசு பஸ்சும், திட்டை ரயில் பாலத்திலிருந்து, திருக்கரூகாவூர் வரை மறு புறம் ஒரு பஸ்சுகளை இயக்க தொடங்கியுள்ளனர். கிராமமக்கள், ரயில் பாலம் வழியாக நடந்து வரமுடியாததால், ரயில் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றார்கள். இதனால் வயது முதிர்ந்தவர்கள், உடல் நலிவுற்றவர்கள், மேடாக உள்ள பகுதியில் ஏறமுடியாமலும், மழையினால், களிமண்ணில் வழுக்கி விழுந்து விடுகிறார்கள்.
அன்னப்பன்பேட்டையை சேர்ந்த முதியவர், உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என 108 ஆம்புலன்ஸ் வண்டிக்கு போன் செய்திருந்தார். உடனே, 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் அந்த முதியவரால், மேடாக உள்ள பகுதியில் ஏறி தண்டவாளத்தை கடந்து வருவதற்குள், அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. ஆம்புலன்ஸில் உள்ளவர்கள், அவருக்கு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்த வரும் நிலையில், திட்டை ரயில் தண்டவாளப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்றார்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், மழை காலங்களில், கிராம மக்கள் அவதிப்படுவதால், அவர்களின் கோரிக்கையை ஏற்றும், கோயில்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, திட்டையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதியளித்துள்ளது. இது குறித்து திட்ட வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டை ரயில் பாதையில், உயர்மட்ட மேம்பாலம் புதியதாக கட்டப்படும் 50 கோடி மதிப்பீட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவு வழங்கியவுடன், பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என்றார்.