’தஞ்சை திருவலஞ்சுழி விநாயகர் கோயிலில் கொடியேற்றம்’- தேர் திருவிழா ரத்து...!
’’செப்டம்பர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, மேலும், அன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் தேரோட்டமும் ரத்து’’
தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 25ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் . ஆதிசேடன், திருமால், பிரம்மன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பாதாளத்தில் அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப்பாதாளத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், திருவலஞ்சுழி என பெயர் பெற்றது. அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளை பிள்ளையாரை இந்திரன் இத்தலத்தில் எழுந்தருளுவித்து வழிபட்டதாக நம்பிக்கை.
இங்குள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது. மிகவும் வேலைப்பாடுடையது. இக் கோயிலில், திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாக கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் என்றழைக்கப்படும் சுவேத விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
முருகனின் நான்காவது படைவீடாக திகழும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணைகோயிலாக திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில் திகழ்கிறது. வாணிகமலாம்பிகை சமேத சுவேத விநாயகர்(வெள்ளை விநாயகர்), பெரியநாயகி சமேத சடைமுடிநாத சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் விநாயக சதுர்த்தி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அப்போது, கொடிமரம் அருகே வாணி- கமலாம்பிகா சமேத சுவேத விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதை தொடர்ந்து வருகிற 11ஆம் தேதி வரை நடைபெற உள்ள விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா உள் பிரகாரத்திலேயே நடைபெறவுள்ளது. விழாவின் முக்கியமாக 6ஆம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 8ஆம் தேதி திருக்கல்யாணமும், 10ஆம் தேதி காலை 7 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜையும், மாலை மூஷிக வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. நிகழாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி கிடையாது என்பதால், விநாயகர் சதுர்த்தி தினமான செப்.10ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, மேலும், அன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் தேரோட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.