தஞ்சை:கரும்புகைகளை வெளியேற்றும் அரசுப்பேருந்து-சீட்டின் கீழே புகை வருவதால் ஓட்டுநருக்கு மூச்சு திணறல்
’’அரசுப்போக்குவரத்து கழகத்தின் கீழ் நீண்ட நாள் ஓடிய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை இயக்க கோரிக்கை’’
![தஞ்சை:கரும்புகைகளை வெளியேற்றும் அரசுப்பேருந்து-சீட்டின் கீழே புகை வருவதால் ஓட்டுநருக்கு மூச்சு திணறல் Tanjore: The driver suffocated due to smoke coming from under the seat of the government bus that was emitting cane. தஞ்சை:கரும்புகைகளை வெளியேற்றும் அரசுப்பேருந்து-சீட்டின் கீழே புகை வருவதால் ஓட்டுநருக்கு மூச்சு திணறல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/27/5b75c977cc88cf3eacf2e5ef3c7635d4_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்தின் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு 22 பணிமனைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1000 க்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகிறது. இப்பேருந்துகளில் தினந்தோறும் சுமார் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கும்பகோணம் கோட்டத்தின் கீழுள்ள திருச்சியில் 1047 பஸ்சுகளும், கும்பகோணத்தில் 509 பேருந்துகளும், கரூரில் 316 பேருந்துகளும், புதுக்கோட்டையில் 438 பேருந்துகளும், காரைக்குடியில் 674 பேருந்துகளும், நாகப்பட்டினத்தில் 593 பேருந்துகள் என 3577 பேருந்துகளும் இயங்கி வருகின்றது.
தஞ்சாவூரில் நகர் 1 & 2, புறநகர் என மூன்று பணிமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றது. தஞ்சாவூரிலிருந்து திருக்கரூகாவூர் வரை செல்லும் நகர பேருந்துகளும் புகை செல்லும் பகுதியிலுள்ள இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், கரும்புகையுடன் சைலன்சர் வழியாக வெளியேறுகிறது. இதே போல் டிரைவர் சீட்டின் கீழும் கரும்புகை வெளியேறி, பேருந்துக்குள் பரவுவதால், டிரைவர் பேருந்தை இயக்க முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பயணிகள், ஓட்டுநர், நடத்துனர்கள் அனைவரும் தினந்தோறும் அவதிக்குள்ளாகி பயணம் செய்து வருகின்றனர். பேருந்தில் உள்ள இயந்திரம் கோளாறு பற்றி, அதிகாரிகளிடம் கூறினால், அவர்கள், பழைய பேருந்துகளில் உள்ள தரமற்ற பொருட்களை பொருத்தி அனுப்பி விடுகிறார்கள். தற்போது அந்த பேருந்து சாலையில் செல்லும் போது, எதிரில் வரும் வாகன ஒட்டிகள், புகையினால், வழி தெரியாமலும், விபத்துக்குள்ளாகி விடுகின்றனர்.
காலை மாலை நேரங்களில் பள்ளிகளுக்கு, இந்த பேருந்தில் செல்லும் மாணவர்கள், டிரைவர் சீட்டின் கீழிலிருந்தும் வரும் புகையினால், வேதனையுடன், பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் அவர்களுக்க சளி பிரச்சனை, தலைவலி, மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பல்வேறு நோய்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இது போன்ற அவல நிலையில் கடந்த ஒரு மாதமாக இருப்பது குறித்து, பலமுறை அதிகாரிகளிடம் புகாரளிததும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயமாகும்.
இது குறித்த பேருந்து பயணி சீனிவாசன் என்பவர் கூறுகையில், தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் நகர பேருந்தில், கடந்த ஒரு மாதமாக கரும்புகை வெளியேறி வருகின்றது. இதனால் பஸ்ஸில் செல்லும் பயணிகளுக்கு கண்ணில் எரிச்சலாகி, தண்ணீர் வடிகின்றது. மேலும் ஜன்னல் ஒரமாக அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகின்றது. இதனால் கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதே போல் டிரைவர் சீட்டின் கீழே உள்ள பகுதியிலுள்ள இயந்திரம் உடைந்த விட்டதால், கரும்புகை சீட்டின் கீழுள்ள பகுதியிலிருந்தும், முன்பக்க சக்கரத்தின் வழியாக வெளியேறுவதால், டிரைவர்கள், கண் எரிச்சலாகியும், மூச்சு திணறல் ஏற்படுகின்றது. கரும்புகையின் ஏற்படும் சூட்டால், உடம்பு நலிவடைந்து போய் விடுகிறது. இதனால் அவர்கள் தினந்தோறும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பல கிராமங்கள் வழியாக செல்லும் இந்த தடத்தில் புதிய பஸ்கள் விடப்பட்டு பல வருடங்களாகின்றது. புதிய பேருந்துகளை விடவேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும், போதுமான சாலை வசதி இல்லாததால், புதிய பேருந்துகளை விடுவதற்கு தயங்குகிறார்கள். தஞ்சாவூர் விக்கிரவாண்டி பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், கனரக வாகனங்கள் வந்து செல்கின்றது. இதனால் சாலைகள் பெயர்ந்தும், குண்டு குழியுமாகி காட்சியளிக்கின்றது. இந்த லாயிக்கற்ற சாலையில், பயங்கர சத்ததுடன், புகையை வெளியேற்றி செல்லும் பஸ், செல்லும் போது, மேலும் பல்வேறு பாகங்கள் உடைய வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக பேருந்துகளை சீரமைக்காவிட்டால், பேருந்துக்குள் புகை வெளியேறி, பயணிகள் அனைவரும் சிரமத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)