அமெரிக்காவில் உள்ள ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி அளிக்கும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
அமெரிக்காவிலுள்ள தமிழ்ப் பள்ளிஆசிரியர்களுக்கு இப்பயிற்சியுடன் அமெரிக்காவின் இளந்தமிழ் மாணவர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டுப் பயிலரங்கமும் எட்யுரைட் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படவுள்ளது .
தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். கடந்த 1981, செப்டம்பர் 15 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது. இதில், பழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு, சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புது உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் முதலிய விரிவானஅடிப்படை நோக்கம் கொண்டது கலைப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் தொடங்கப்பட்டு தற்போது சிற்பம், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டுவருகின்றன. தமிழ்ப் பணிக்கு அடிப்படையாக அமையும் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள் முதலியவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்துப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கம் கொண்டது சுவடிப்புலம். இப்புலத்தின்கீழ், ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச்சுவடித்துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை ஆகிய நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
பலவிடங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் விரிவானஅடிப்படையில் பலதுறை சார்புடையதாக ஆய்வு அமைய வழிசெய்தலை நோக்கமாகக் கொண்டது வளர்தமிழ்ப்புலமாகும். இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளை வளர்ப்பது, தமிழ் இலக்கியப் படைப்புகளை உரிய முறையில் உலகிற்கு அறிமுகப்படுத்துவது ஆகிய அடிப்படை நோக்கங்களைக் கொண்டது மொழிப் புலமாகம். இப்புலத்தின்கீழ், இலக்கியத் துறை, மொழியியல் துறை, மெய்யியல் துறை, பழங்குடி மக்கள் ஆய்வு மையம் நாட்டுப்புறவியல் துறை,இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி உள்ளிட்ட ஆறு துறைகள் செயல்பட்டுவருகின்றன.
பழந்தமிழரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மரபுச் செல்வங்களைத் தேடிக் கண்டு தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் இக்கால நவீன தொழில்நுட்ப நுணுக்கங்களைத் துணை கொண்டு பயன் காணல் முதலான நோக்கங்களைக் கொண்டது இப்புலம். அறிவியற் புலமாகும். இதன்கீழ் , சித்த மருத்துவத்துறை, தொல்லறிவியல் துறை, தொழில் மற்றும் நில அறிவியல் துறை,கட்டடக்கலைத்துறை, கணிப்பொறி அறிவியல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை என இப்போது ஆறு துறைகள் செயல்படுகின்றன.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் அமெரிக்காவின் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குப் புத்தொளிப் பயிற்சி ஜூலைமாதத்தில் வழங்கப்படவுள்ளது என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிர்வாகமும், அமெரிக்காவின் எட்யுரைட் அறக்கட்டளையும் ஒப்பந்தம் செய்து கொண்டன.
இதையடுத்து, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் கூறுகையில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர் மையத்தின் மூலம் அயலகத் தமிழர்களுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2020 ஆம் ஆண்டில் தமிழ் வளர் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட அமெரிக்காவின் எட்யுரைட் அறக்கட்டளை மூலம் சுமார் 197 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு 8 வார கால இணையவழிப் புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூலை மாதம் புத்தொளிப் பயிற்சி நேரடியாக நடத்தப்படவுள்ளது. அமெரிக்காவிலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான இப்பயிற்சியுடன் அமெரிக்காவின் இளந்தமிழ் மாணவர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டுப் பயிலரங்கமும் எட்யுரைட் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படவுள்ளது என்றார். பின்னர், எட்யுரைட் அறக்கட்டளைத் தலைவர் கீர்த்தி ஜெயராஜ் கூறுகையில், இப்பயிலரங்கப் பயிற்சிக்காக அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிஆசிரியர்களுக்கு இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மூலம் பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) க. சங்கர், தமிழ் வளர் மைய இயக்குநர் இரா. குறிஞ்சிவேந்தன், தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் சி. தியாகராஜன் உடனிருந்தனர்.