தேசிய அளவில் நடந்த கலை திருவிழாவில் தஞ்சை அரசு பள்ளி மாணவன் 3ஆம் இடம் பிடித்து சாதனை
’’தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்து மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்த ஆர்.சரணுக்கு 15,000 ரொக்கம் பரிசாக அறிவிப்பு’’
மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து வகையான பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கலா உத்சவ் (கலைத்திருவிழா) தேசிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகின்றன.
இதில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் முதன்முறையாக தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாரியம்மன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 10 ஆம் வகுப்பு மாணவன் ஆர்.சரண் தஞ்சாவூர் பாரம்பரிய ராஜாராணி பொம்மை செய்து மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவன் சரணுக்கு ரூபாய் 15,000 பரிசு, கேடயம், வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் தஞ்சை மாவட்டம் சார்பில் கடந்த 7 ஆண்டுகளில் முதன்முறையாக தேசிய அளவில் பங்குபெற்று வெற்றிபெற்றுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட மாணவர்களுக்கு போட்டிகள் இணைய வழியில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. தேசிய அளவிலான போட்டிகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாநில அளவிலான போட்டியில் காண்கலை--உள்ளூர் தொன்மை பாரம்பரிய பொம்மைகள் செய்தல் பிரிவில் முதல் இடம்பெற்ற அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் சரண் தேசிய அளவில் 5.1.2022 , 6.1.2022 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்றிருந்தார். இதன் முடிவுகள் நேற்று 18.01.2022 வெளியிடப்பட்டன.. இதில் மாணவர் ஆர்.சரண் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
தேசிய அளவில் வெற்றிபெற்ற மாரியம்மன்கோவில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவன் ஆர்.சரண் மற்றும் அவரது பெற்றோர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவக்குமார் வரவேற்று வாழ்த்தி சாதனை படைத்த மாணவருக்கு பரிசுகள் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தி பாராட்டி மகிழ்ந்தார் .அதனைத் தொடர்ந்து சாதனை மாணவர் சரண் அவரது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜா, உதவி திட்ட அலுவலர் திரு. ரமேஷ்குமார், பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. ரமேஷ், கலாஉத்சவ் நிகழ்ச்சி தஞ்சை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு மாடசாமி மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் திரு.அன்பழகன், ஓவிய ஆசிரியர் திரு.ரவீந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.