ஆஹா விலை குறைச்சிடுச்சு... இதோ வந்துட்டோம்: தஞ்சை மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்
தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட்டில் கடல் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. இதனால் மீன்கள் வாங்க அசைவப்பிரியர்கள் குவிந்தனர்.
தஞ்சாவூர்: ஆஹா வந்திடுச்சு... ஆசையில் ஓடி வந்தேன் என்று பாட்டு மட்டும்தான் பாடாத குறை. யாருங்க என்கிறீர்களா. எல்லாம் மீன் உணவு பிரியர்கள்தான். தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட்டில் கடல் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. இதனால் மீன்கள் வாங்க அசைவப்பிரியர்கள் குவிந்தனர். ஒரு கிலோ சிறிய வஞ்சிரம் மீன் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட்
தஞ்சை வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே அகழிக்கரையில் தற்காலிக மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டுக்கு நாகப்பட்டினம், காரைக்கால், கன்னியாகுமரி, கடலூர், சென்னை, தூத்துக்குடி, அதிராம்பட்டினம், ராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் ஆகிய கடலோர பகுதிகளில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த மீன் மார்க்கெட் மீன் பிடி தடைக்காலத்தின் போது மக்கள் வரத்து குறைந்து வெறிச்சிட்டு இருந்த நாட்களும் உண்டு. இப்போது தடைக்காலம் முடிந்து கடல் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இதேபோல் தஞ்சை பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டு மீன்களும் இந்த தற்காலிக மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை காலங்கள், விஷேச நாட்களில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். மீன் அதேபோன்று மீன்களும் விற்பனை அதிகமாக இருக்கும்.
விலை குறைந்தது... வரத்தும் அதிகரித்தது
ஆனால் நேற்று தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் கடல் மீன்கள் மற்றும் நாட்டு மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. கடல் மீன்கள் 1,000 டன்களும், நாட்டு மீன்கள் 600 டன்களும் விற்பனைக்காக வந்தது.
குவிந்த அசைவப்பிரியர்கள்
இதனால் ஒரு கிலோ சிறிய வஞ்சிரம் மீன் ரூ.200க்கும், - பெரிய வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று மீன்கள் விற்பனை மும்முரமாக இருக்கும். அதேபோன்று நேற்றும் மீன்கள் விற்பனை அதிகமாக இருந்தது. மற்ற ஞாயிற்று கிழமைகளில் வரும் மக்கள் கூட்டத்தை விட நேற்று விலை குறைந்ததால் மீன்கள் வாங்க அசைவ பிரியர்களும் அலை மோதினர்.
நேற்றைய மீன்களின் விலை
தஞ்சையில் நேற்று சங்கரா ரூ.200, வஞ்சிரம் ரூ.200 முதல் ரூ.600 வரை, நண்டு ரூ.200, கிளங்கா ரூ.200, ஜிலேபி ரூ.100, இறால் ரூ.300, விரால் ரூ.450, உயிர்கெண்டை ரூ.160, ஐஸ் கெண்டை ரூ.120, - கோலா ரூ.100, கொடுவா ரூ.300, தேங்காய் பாறை ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது.
மீன்கள் விற்பனை அதிகரிப்பு
இதுகுறித்து மீன் வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது: மீன்பிடி தடைக்காலம் முடிந்து 5 வாரங்கள் ஆன நிலையில் கடல் மீன்கள் வரத்து அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. வார நாட்களில் முக்கியமாக ஞாயிறு அன்று மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். ஆனால் இன்று (நேற்று) வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகம் கூட்டம் இருந்தது.
கடல் மீன்கள் மற்றும் நாட்டு மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் மீன்களை அதிகமாக வாங்கி செல்வார்கள். அதேபோல் நேற்றும் அதிகமாக மீன்களை வாங்கி சென்றனர். முக்கியமாக விலையும் குறைந்துள்ளதால் ஆடி ஞாயிறு அன்றும் மீன்கள் விற்பனை ஜோராக இருந்தது. கடந்த சில நாட்களாக வருமானம் குறைந்த அளவில் இருந்தது. இன்று (நேற்று) மக்களின் உற்சாக கூட்டத்தால் எதிர்பார்த்தை விட அதிகம் விற்பனை ஆனது. இவ்வாறு அவர்கள் கூறினார்.