தஞ்சை கூட்டுறவு சங்க துணை பதிவாளர் திடீர் இடமாற்றம் - பின்னணியில் திமுக நிர்வாகிகள்?
குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள பண்டரிநாதன் திமுகவிற்கு கட்சி மாறினார். இப்போது அவர் குற்றமற்றவராக மாறிவிட்டாரா? என அதிகாரிகள் கேள்வி
![தஞ்சை கூட்டுறவு சங்க துணை பதிவாளர் திடீர் இடமாற்றம் - பின்னணியில் திமுக நிர்வாகிகள்? Tanjore Co-operative Society Deputy Registrar abruptly transferred - DMK executives in the background? தஞ்சை கூட்டுறவு சங்க துணை பதிவாளர் திடீர் இடமாற்றம் - பின்னணியில் திமுக நிர்வாகிகள்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/02/7f1c4e6ddd3e9f62e10bfff5f17f4ba5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பணியில் குறைபாடு இருப்பதாகக்கூறி தஞ்சாவூர் சரக கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் குன்னூருக்கு இடமாற்றம்
ஆளுங்கட்சியில் உள்ள தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சிறப்பு கூட்டம் நடத்த உத்தரவிடலாம் எனக்கூறி மிரட்டி, அவரை இடமாறுதல் செய்துள்ளனர்
தஞ்சாவூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளராக எஸ்.குமாரசுந்தரம் (56) பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது பணியில் குறைபாடு இருப்பதகாவும், நிர்வாக காரணங்களுக்காகவும் நீலகிரி மாவட்டம் குன்னூர் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நஜிமுதீன், நவம்பர் 30ஆம் தேதி பணியிடமாறுதல் ஆணையை குமாரசுந்தரத்துக்கு அனுப்பியுள்ளார். ஆணையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பரிந்துரைத்த கருத்துக்களை ஏற்று, தஞ்சாவூர் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் குமாரசுந்தரம், குன்னூர் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறது. புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேர வேண்டும். மாற்று பணியிட கோரிக்கையோ, விடுப்பு விண்ணப்பமோ ஏற்க முடியாது என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறுகையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமாரசுந்தரம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தஞ்சாவூர் சரக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைவராக உள்ள பண்டரிநாதன், அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சில மாதங்களுக்கு முன் கட்சி மாறினார். இந்த நிலையில் 21 இயக்குநர்கள் கொண்ட பண்டகசாலை நிர்வாகிகளில் 16 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள், 5 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள்.
பண்டகசாலை தலைவரான பண்டரிநாதன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அதிமுகவைச் சேர்ந்த இயக்குநர்கள் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளரிடம், தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், அவரை மாற்ற வேண்டும் என கையெழுத்திட்டு மனுக்களை வழங்கினர். ஆனால் அன்றைய தினம் கூட்டம் நடத்த ஜெயசுதா வரவில்லை. ஆனால் அதிமுக இயக்குநர்கள் மட்டும் கலந்து கொண்டு தாங்களாகவே கூட்டத்தை நடத்தினர். மேலும், ஜெயசுதாவை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், ஆளுங்கட்சியில் உள்ளவர்கள், துணைப்பதிவாளர் குமாரசுந்தரத்தை அணுகி எப்படி ஆளுங்கட்சியில் உள்ள தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சிறப்பு கூட்டம் நடத்த உத்தரவிடலாம் எனக்கூறி மிரட்டி, அவரை இடமாறுதல் செய்துள்ளனர். இதனால் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் இதர அதிகாரிகளும் ஆளுங்கட்சியின் மீது அருப்தியடைந்துள்ளனர். இப்பிரச்சனை தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுக்கும். தமிழக முதல்வர் இடமாற்றத்திற்கு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனால் தஞ்சாவூரில் ஆளூங்கட்சியான திமுகவை சேர்ந்தவர்கள், ஆணையர், கூட்டுறவு சங்க அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர். ஆனால் ஆணையர், திமுகவை சேர்ந்தவர்களை மதிக்காததால், ஆணையரை என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள பண்டரிநாதன், தனது குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள திமுகவிற்கு கட்சி மாறினார். ஆளுங்கட்சியான திமுகவிற்கு மாறியதால், குற்றச்சாட்டப்பட்டுள்ள பண்டரிநாதன், குற்றம் இல்லாதவர்களாகிவிட்டார் என அலுவலர்கள் புலம்புகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)