தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு நிறைவு
இதில் நான்காம் நாளும் நிறைவு நாளுமான இன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று புதிய நிர்வாகிகள் தேர்வும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்து வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 16-வது மாநில மாநாட்டில் நிறைவு நாளான இன்று கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு உடன் வெளியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு தஞ்சாவூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் நான்காம் நாளும் நிறைவு நாளுமான இன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று புதிய நிர்வாகிகள் தேர்வும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக களப்பிரனும், மாநில தலைவராக மதுக்கூர் ராமலிங்கம், மாநில பொருளாளராக சைதை ஜெ, மதிப்புறு தலைவராக ரோகிணி, துணைத் தலைவர்களாக சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, நா.முத்துநிலவன், க.உதயசங்கர், ஆர்.நீலா, பிரளயன் உள்ளிட்ட 44 செயற்குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய 149 பேர் கொண்ட மாநிலக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளை இரவு 10 மணிக்குள் முடிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஓரிரு மணி நேரத்தில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் பெருத்த சிரமம் ஏற்படுகிறது. எனவே கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது.
எதிர்கால புதிய தலைமுறையினர் இந்திய அரசியல் சாசனத்தைத் தெரிந்து கொள்கிற வகையில் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். தென்காசி மாவட்டம், குலசேகரப்பேரி கண்மாயில் இரண்டாம் கட்ட அகழாய்வும், தேனி மாவட்டம் போடி வட்டத்தில் முல்லைப் பெரியாற்றங்கரையில் உள்ள டொம்புச்சேரி தொல்லியல் மேட்டில் அகழாய்வும், தேனி மாவட்டம் சில்வார்பட்டியில் உள்ள அரிதான குழிக்குறி கல்திட்டையை நினைவுச் சின்னமாக அறிவித்துப் பாதுகாக்க வேண்டும்,
இந்திய அரசியல் சாசனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அதைச் சிதைக்கவும், மாற்றவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. எனவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சாசன முகவுரையை அரசு முக்கிய அலுவலகங்களில் கல்வெட்டுகளாக நிறுவப்பட வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் தொல் பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் வரலாற்று பார்வை தர தமிழ்நாட்டிலுள்ள 53 தொல்லியல் இடங்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் இலவசமாக சென்றுவர தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும்.
கீழடியை ஆய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சமூக இயக்கங்களும் வலியுறுத்தப்பட்ட பின்பும் வெளியிட மறுக்கிறது மத்திய அரசு. எனவே காலதாமதமின்றி கீழடி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் காட்சி ஊடக ஆளுமைகளாக மாணவர்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் அரசு திரைப்படக் கல்லூரிகளைத் துவங்க வேண்டும்.மத்திய திட்டக்குழு இருந்தவரை பல்கலைக்கழக மானியக்குழு வழியாக மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2014 க்குப் பிறகு இது படிப்படியாக நிறுத்தப்பட்டது.ஆகவே கேரள அரசு வழங்குவதுபோல் தமிழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் உதவித்தொகைத் திட்டத்தை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




















