தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தனியார்மயமாக்கப்படும் என்பது முற்றிலும் வதந்தி - ராதாகிருஷ்ணன்
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 01.10.2020ல் இருந்து அமலில் இருக்கிறது. இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தும் இங்கு பணிபுரிபவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தனியார்மயமாக்கப்படும் என்பது முற்றிலும் வதந்தி என்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கலந்த இரண்டு நாட்களாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு சொந்தமான பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு அங்காடி சேமிப்பு கிடங்கு ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் திடீரென ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். அப்பொழுது பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் நான்கு கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 4500 மெட்ரிக் டன் கொள்ளளவில் கான்கிரீட் தளத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. இதனை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது...
ரேஷன் அரிசி கடத்தலில் இதுவரை 11,008 வழக்குகள் போட்டுள்ளோம் அதில் 11,121 பேரை கைது செய்துள்ளோம். குறிப்பாக குண்டர் சட்டத்திற்கு இணையான சட்டத்தில் 113 பேரை கைது செய்துள்ளோம். வரலாற்றில் மிக அதிகமாக சென்ற வருடம் 22 லட்சத்து 5470 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதில் உற்பத்தியானது 1.22 கோடி மெட்ரிக் டன் ஆகும். கொள்முதல் செய்யப்பட்டது 43.5 லட்சம் மெட்ரிக் டன். உற்பத்தியில் அவர்கள் உணவுக்கு தேவையானது எடுத்து வைத்துக் கொள்வது விற்பது போக 38 சதவீதத்திலிருந்து 40% உற்பத்தியை தான் நாம் எப்போதும் கொள்முதல் செய்வோம் சென்ற வருடமும் அதை போன்று செய்துள்ளோம். எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயமாக்கும் திட்டம் கிடையாது. இது அதிகாரமமற்ற வதந்தியாகும். உணவுத்துறை அமைச்சரே அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். எங்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கான பதவி உயர்வு என்பது அவர்களின் தகுதியின் அடிப்படையில் கண்டிப்பாக நிரப்பப்படும்.
இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 974 ஒரு நபர் கார்டுகளை அவர்கள் இறந்து விட்டதால் எடுத்திருக்கிறோம். மூன்று பேர் நான்கு பேர் உள்ள கார்டுகளில் ஒரு உறுப்பினர் இறந்திருக்கும் அடிப்படையில் 14, லட்சத்து 26 ஆயிரத்து 148 பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மூன்று மாதமோ 6 மாதமோ எட்டு மாதமோ ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் அவர் பெயரை வைத்து மற்றொருவர் வாங்க கூடாது என்பதற்காக விசாரணை செய்வோமே தவிர கேன்சல் செய்ய மாட்டோம். நான் ஊருக்கு சென்று விட்டேன் மூன்று மாதம் கழித்து திரும்பி வாங்குவேன் என்று சொன்னால் அவர்களுக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்படும். அதே சமயம் ஆண்டுதோறும் வாங்காதவர்கள் கௌரவ குடும்ப அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். சுமார் 60,000 பேர் கௌரவ குடும்ப அட்டை வைத்திருக்கிறார்கள். எனவே தற்காலிகமாக வெளியூர் சென்றதால் வாங்க முடியாதவர்களை நாங்கள் நீக்குவதில்லை. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 01.10.2020ல் இருந்து அமலில் இருக்கிறது. இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தும் இங்கு பணிபுரிபவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.