மயிலாடுதுறையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த 22 செம்மறி ஆடுகள் - கால்நடைதுறை அதிகாரிகள் ஆய்வு
மயிலாடுதுறை அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் என்பவரின் மகன் 48 வயதான முனியாண்டி. இவரும் இவர்களது குடும்பத்தினரும் புத்தகரம் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது முனியாண்டி 150 செம்மறி ஆடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். நேற்று இரவு முதிர்ந்த ஆடுகளை தனியாகவும், 22 இளைய ஆடுகளை தனியாகவும் அடைத்து வைத்துள்ளார். இந்த சூழலில் இன்று காலை பார்த்தபோது 22 இளைய செம்மறி ஆடுகள் சந்தேகமான முறையில் இறந்து கிடந்த உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முனியாண்டி மணல்மேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் மணல்மேடு காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ராமபிரபா, கால்நடை வல்லுநர்கள் ஆடுகள் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து மணல்மேடு காவல்துறையினர் ஆடுகள் சந்தேகமான முறையில் இறந்தது குறித்து யாரேனும் ஆடுகளுக்கு விஷம் வைத்திருப்பார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் ஆடுகளை உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின் வரும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓரே நேரத்தில் 22 ஆடுகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களின் வாழ்வாதாரம்மான ஆடுகள் இறந்தது தங்களுக்கு பெரும் இழப்பு என்றும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகளை இழந்துள்ள தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என முனியாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயமும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பும் இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று மயிலாடுதுறை பகுதியில் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்தேறி அது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்று 22 ஆடுகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ஆடு வளர்ப்பவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஒரு வருடமாக போடப்படாத கோமாரி நோய் தடுப்பூசிகள் - மீண்டும் தொடங்க கால்நடை வளர்ப்போர் கோரிக்கை