நெருங்கி வரும் பொங்கல் பண்டிகை - கரும்பில் தோகை உரிக்கும் பணிகள் மும்முரம்
தஞ்சை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொங்கல் கரும்பு சாகுபடி பணிகளில் தோகை உறித்தல் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் வளப்பக்குடி, மன்னார்சமுத்திரம், கூடநாணல், திருக்காட்டுப்பள்ளி, அடஞ்சூர், சூரக்கோட்டை, மடிகை, ஒரத்தநாடு பகுதியில் ஒரு சில பகுதிகளில் பொங்கல் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தற்போது கரும்பில் தோகை உறிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பொங்கல் கரும்பை பொறுத்த வரையில் சாகுபடி செய்ய 10 மாத காலம் வரை ஆகும். சித்திரை மாதத்தில் பயிரிடப்பட்ட கரும்புகள் ஜனவரி மாதத்தில் தான் அறுவடை செய்யப்படும். ஓராண்டு பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால் முதல் 3 உழவிற்கு பின்னர் சமன் செய்யும் கருவியை கொண்டு நிலத்தை சீரமைத்து பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களை அமைக்க வேண்டும். நல்ல வளமான மண்ணில் குறைந்த தூர்விடும் ரகமாக இருந்தால் 75 செ.மீ இடைவெளி விட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கரும்பு பயிர் நன்கு வேர் ஊன்றி வளரவும், கரும்பு வளர்ந்த பின்னர் சாயாமல் இருக்கவும், பார்களுக்கு இடையே 20 செ.மீ முதல் 30 செ.மீ ஆழத்தில் சால் அமைக்க வேண்டும்.
6 மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களிலிருந்து விதை பருக்களை சேகரிக்க வேண்டும். விதை நேர்த்தி செய்த விதைப் பருக்களை கோணிப்பையில் காற்று புகாத வகையில் இறுக கட்டி நிழலில் 5 நாட்கள் வைத்திருக்க வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை. முதலில் குழி தட்டுகளின் பாதியளவில் தென்னை நார் கொண்டு நிரப்ப வேண்டும்.
பின்பு விதைப் பருக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை தென்னை நார் கொண்டு நிரப்ப வேண்டும். தினசரி தண்ணீர் தெளிக்க வேண்டும். நாற்றங்காலில் நாற்றுகள் 25 முதல் 30 நாட்கள் வயது அடைந்தவுடன் வேர்ப் பகுதியில் உள்ள தென்னை நார்க் கழிவுடன் சேர்த்து 5 x 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் அல்லது 2 முதல் 3 பக்க சிம்புகள் வந்தபின் மண்ணில் இருந்து ஓர் அங்குல உயரத்தில் கவாத்து செய்யும் கத்தரி கொண்டு வெட்டிவிட வேண்டும்.
வெட்டுவதற்கு முன் சொட்டு நீர்ப் பாசனமாக இருந்தால் அதன் மூலம் யூரியா அளிக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்காவிடில் ஒரு தேக்கரண்டி அளவு யூரியா இட வேண்டும். கரும்புக்குத் தேவையான நீரை சிக்கனமாக, பயிருக்கு வேண்டிய அளவு மட்டும் தினமும் அளிக்க வேண்டும்.
கரும்பு 5 முதல் 7 மாத பயிராக இருக்கும் போது சாதாரணமாக 30 தோகைகள் வரை இருக்கும். பயிரின் மேற்பகுதியில் உள்ள 8 முதல் 10 தோகைகள் மட்டுமே ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுகின்றன. மற்றவை சத்தை உறிஞ்சுவதில் போட்டியிடுவதால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள காய்ந்த தோகைகளை, ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படாதவற்றை உறித்து பார்களில் பரப்பி விடுவதால் பயிர் வளர்ச்சி சீராக இருப்பதோடு, மண்ணின் ஈரம் காக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதால் கரும்பு சீராக அதே நேரத்தில அதிக வாளிப்புடன் வளரும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை கரும்பு பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும். மழை தொடரவில்லை என்பதால் கரும்பு பயிர்கள் நன்கு வளர உதவியாக உள்ளது. இன்னும் 20 நாட்களில் அறுவடை தொடங்கி விடும் என்பதால் கரும்பு விவசாயிகள் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.