மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை: சக மாணவர்கள் 4 பேர் மீது போக்சோ வழக்கில் கைது
இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு அருகிலுள்ள அரசு பள்ளியில் படித்தும் வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விளையாட்டு விடுதியில் தங்கி படித்து வந்த 14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்கள் 4 பேரை போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர், மருத்துவக்கல்லுாரி சாலையில், அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக விடுதி செயலப்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு அருகிலுள்ள அரசு பள்ளியில் படித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விடுதியில் தங்கி படிக்கும் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவனை, பிளஸ் 2 படிக்கும் இரண்டு மாணவர்கள், 10வது மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சேர்ந்து கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும் சிகரெட் குடிக்க வேண்டும் என்றும் துன்புறுத்தி உள்ளனர். இந்த மாணவர்களின் டார்ச்சர் அதிகரித்ததால் கடும் மன உளைச்சளுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட மாணவன், தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து மாணவனின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டிடம் புகார் அளித்தனர். இதன் பேரில், மாணவனை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்திய நான்கு மாணவர்களும் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவனால் அளிக்கப்பட்ட தகவலின் பேரில், குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன், நான்கு மாணவர்கள் மீது, தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நான்கு மாணவர்களையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவங்கள் உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமையம் முன்பு ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப்பள்ளியில் நேற்று இரவு சேர்த்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டு வேலை அனுப்புவதாக கூறி மோசடி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா அய்யாவாடி அருகே செம்பியவரம்பல் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (60). இவர் கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஒரு தனியார் டூர்ஸ்-டிராவல்ஸ் நிறுவனத்தில் 2019, 2020 ஆகிய 2 ஆண்டுகள் வேலை பார்த்தார்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட்வில்சன்(45). செல்வத்திற்கு உடல் நிலை சரியில்லாததால் 2020 ஆண்டுக்கு பிறகு வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் ஆல்பர்ட் வில்சன், செல்வத்திடம் கனடா நாட்டில் பேக்கிங் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாகவும், தெரிந்தவர்கள் இருந்தால் தெரிவிக்கவும் என்று கூறியுள்ளார். அதன்படி செல்வம் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 6 பேரை ஏற்பாடு செய்துள்ளார்.
அவா்களை கனடா நாட்டிற்கு வேலைக்கு அனுப்ப 1 நபருக்கு தலா ரூ.3 லட்சம் ஆகும் என்றும், அதற்கு முன்பணம் ரூ.1.50 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி செல்வம் அவரது உறவினர்கள் நண்பர்களிடம் என ரூ.9 லட்சத்தை கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர், டிசம்பர், 2021-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பல்வேறு தவணைகளாக ஆன்லைனிலும், நேரிலும் கொடுத்துள்ளார்.
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஆல்பர்ட் வில்சன் யாரையும் வேலைக்கு அனுப்பவில்லை. இதுகுறித்து பலமுறை நேரில் கேட்டபோது வேலைக்கு ஆட்களை கட்டாயம் அனுப்பி வைப்பேன் என்று கூறியுள்ளார். ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும் யாரையும் வேலைக்கு அனுப்பவில்லை. தொடர்ந்து டிராவல்ஸ்க்கு நேரில் கேட்க சென்ற போது நிறுவனம் பூட்டி இருந்தது. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ஸ் ஆப் என்று வந்துள்ளது.
இதுகுறித்து செல்வம் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஆல்பர்ட் வில்சனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோதிலால் தெருவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திய ஆல்பர்ட்வில்சன் செல்வத்தின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கனடா, குவைத், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 22 பேரிடம் ரூ.35லட்சத்து 40 ஆயிரம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.





















