வலையில் சிக்கிய அதிசய உயிரினம்... உடனே மீனவர்கள் செய்த காரியம் என்ன?
பேராவூரணி அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில், மீனவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் வலையில் அரிய வகை கடல் உயிரினமான கடல் பசு சிக்கியது. உடனே இதனை வனத்துறையினர் ஆலோசனையின் படி நல்ல நிலையில் கடலில் திரும்ப விட்டனர். இதையடுத்து மீனவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நிலத்தில் காணப்படும் பசுக்களை போன்ற முகத்தோற்றத்துடன் கடல்வாழ் தாவரங்களை, குறிப்பாக கடற்புற்களை உணவாக உண்டு வாழ்வதால் இந்த உயிரினத்திற்கு கடற்பசு என்ற பெயா் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் இவை டுகாங் என்று அறியப்படுகிறது. கடற்கரையோரப் பகுதி மக்களால் கடற்பசு, ஆவுளி, ஆவுளியா என்று வேறு பெயா்களுடன் அழைக்கப்படும் இவ்விலங்கானது அந்தமான் நிக்கோபரின் மாநில விலங்காக உள்ளது.
கடற்புற்கள் நிறைந்த பகுதி, கடல் நீரோட்டங்களால் உருவான அலையாத்தி காடுகளின் ஆழமற்ற நீா்ப்பகுதி, தீவுகளை ஒட்டிய பகுதிகள் போன்ற பல்வேறு பகுதிகளை தங்களின் வாழ்விடமாக கொண்டுள்ளன. கடலில் வாழும் பாலூட்டி வகை விலங்குகளில் தனித்திருப்பதும், எண்ணிக்கையில் அருகிவருவதும் கடற்பசுக்கள் மட்டுமே. வெப்ப மண்டல இந்தோ-பசிபிக் பகுதிகளில் அமைந்துள்ள ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், மடகாஸ்கா், இலங்கை, இந்தியா போன்ற 30 க்கும் அதிகமான நாடுகளின் குறிப்பிட்ட கடல் பகுதிகளில் கடற்பசுக்கள் காணப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தமட்டில், முந்தைய காலகட்டத்தில் பரவலாக அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் காணப்பட்ட இவ்வுயிா்கள் இன்று பாக் நீரிணை, கட்ச் வளைகுடா, மன்னாா் வளைகுடா, அந்தமான் நிக்கோபா் தீவுகள் போன்ற குறிப்பிட்ட பகுதிகளின் கடற்பரப்புகளில் மட்டும் காணப்படுகின்றன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் இந்த கடற்பசுக்கள் தென்படுகின்றன. இவற்றை மீனவர்கள் துன்புறுத்த கூடாது என்று வனத்துறையினர் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
கடற்பசு குறைந்த கண்பாா்வை உடையதால் ஒலி எழுப்புதல் மற்றும் தொடுதல் உணா்வுகள் மூலம் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக் கொள்கிறது. மெதுவாக நீந்தும் தன்மை உடையது. நன்கு வளா்ந்த கடற்பசு சுமார் 3-4 மீ நீளமும், 350-400 கிலோ எடையும் கொண்டது. நாள் ஒன்றுக்கு சுமார் 40-50 கிலோ அளவுக்கு கடற்புற்களை உணவாக எடுத்துக்கொள்ளும். மணிக்கு 10-15 கி.மீ. வேகத்தில் நீந்தும் திறன் கொண்டது. பொதுவாக கடற்பசுக்கள் கடலின் மேற்பரப்பிலே நீந்தும் என்று ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.
இந்த கடற்பசுதான் பேராவூரணி அருகே மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், பேராவூரணி அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில், மீனவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர்.
அப்போது மீனவர்கள் வலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமான சுமார் 7 அடி நீளமுள்ள கடல் பசு சிக்கியிருந்தது தெரிய வந்தது. கடற்பசுக்கள் குறித்து இந்த மீனவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். இதனால் அதனை துன்புறுத்தாமல் மீனவர் பிரபாகரன் மற்றும் அவரைச் சார்ந்த 14 மீனவர்கள் வலையை அறுத்து, கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் உயிருடன் கடலுக்குள் விட்டனர். தங்களுக்கு வலை நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. சாதுவான கடற்பசுவிற்கு தீங்கு ஏற்படக்கூடாது என்று மீனவர்கள் இதை செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.ஆர்.சந்திரசேகரன், மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, விரைவில் விழா நடத்தி, மீனவர்களைப் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கப்படும். வனத்துறை, மீன்வளத்துறை, சமூக அமைப்புகள் இணைந்து, மீனவ மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதன் எதிரொலியாக, இதுவரை மீனவர்கள் வலையில் உயிருடன் சிக்கிய ஏராளமான கடல் பசுக்கள், அரியவகை கடல் ஆமைகள் மீண்டும் உயிருடன் கடலுக்குள் விடப்பட்டு வருகின்றன" என தெரிவித்தார்.
மனிதநேயமிக்க இந்த மீனவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கடற்பசுக்களை எவ்விதத்திலும் துன்புறுத்தக்கூடாது என்று வனத்துறையினரும் தொடர்ந்து மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்

