தஞ்சை மாவட்ட கடலோர பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் அந்நியர்கள் ஊடுருவலை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடற்படையினர், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இணைந்து, சாகர் கவாச் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டனர்.
அதன்படி தஞ்சாவூர் மாவட்ட எல்லையான தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி, புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கட்டுமாவடி வரை உள்ள அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் தலைமையில், பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன் (சேதுபாவாசத்திரம்), ஜீவானந்தம் (அதிராம்பட்டினம்) மற்றும் காவலர்கள் இணைந்து படகு மூலம் கடலுக்குள் சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கடலுக்குள் அந்நியர் நடமாட்டம், சந்தேகத்திற்குரிய படகுகள் நடமாட்டம், சட்ட விரோத செயல்பாடுகள் காணப்பட்டால், உடனடியாக காவல்துறை, கடலோர காவல் படைக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
தொடர்ந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் அடையாள அட்டை, படகின் ஆவணங்கள் ஆகியவற்றை வாங்கி சோதனையிட்டனர். மேலும், மீன்பிடித்து விட்டு கடற்கரைக்கு திரும்பிய மீனவர்களிடமும் சோதனை நடத்தினர். மேலும், கடற்கரை கிராமங்களில் பொதுமக்களிடமும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக, பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோல், கட்டுமாவடி முதல் தம்பிக்கோட்டை வடகாடு வரை சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்பு அமைத்து, அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.






















