காவல்துறை குடும்பத்தில் குடும்ப உறுப்பினராக வலம் வந்த 'சச்சினுக்கு" கண்ணீர் அஞ்சலி பேனர்! தெரு வாசிகள் சோகம்!
வீட்டை விட்டு வெளியில் சென்ற செல்லப்பிராணி விபத்தில் உயிரிழந்ததை அடுத்து செல்லப்பிராணி 'சச்சினுக்கு" கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து உரிமையாளர்கள், தெருவாசிகள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் பணி சுமை காரணமாக மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போதைய சூழலில் மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் பொறுப்புகளை சரியாக செய்வதற்காக, தங்களை அறியாமல் அதிகமான அழுத்தத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இது மனச்சோர்வு அடைவதற்கு வழிவகுக்கிறது.
மன அழுத்தத்தை போக்க யோகா, விளையாட்டு, என பல்வேறு வழிகளில் இருந்தாலும், செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது ரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் 'கார்டிசோல்' எனும் தீங்கு விளைவிக்கும் ஹார்மோன் குறைந்து, 'ஆக்சிடோசின்' எனும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அதிகமாக சுரப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே வாலை ஆட்டியபடி, ஒவ்வொரு நாளும் உங்களைச் சுற்றிவரும் வளர்ப்பு நாயுடன் சிறிது நேரம் செலவிடுங்கள் என்கின்றனர் பல மனநல மருத்துவர்கள்.
இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் பாதிக்கப்படுகிறார்கள். செல்லப்பிராணிகள் வளர்ப்பு, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது ரத்தத்தில் கொலஸ்டிரால் மற்றும் டிரை கிளிசரைடு அளவுகளைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. காரணம், நாய்கள் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே இருக்கும் குணம் கொண்டவை அல்ல. எனவே அவை அவ்வப்போது வெளியில் செல்வதற்கு கட்டாயப்படுத்தும். இதனால் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல், வெளியில் சென்று உலவுவதால் உடலுக்கு பயிற்சி கிடைக்கும். மேலும் இயற்கை வெளியில் சிறிது நேரம் இருப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதால் ரத்த அழுத்தம் குறையும்.
செல்லப்பிராணியை பராமரிப்பதும், குழந்தையைப் பராமரிப்பதும் கிட்டத்தட்ட ஒன்றாகும். செல்லப்பிராணியை வளர்க்கும் நபர்களுக்கு இயற்கையாகவே பாச உணர்வு மேலோங்கி இருக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பெறுவதற்கு முன்பு, செல்லப்பிராணிகள் வளர்ப்பது, அவர்களின் பொறுப்பு, முடிவெடுக்கும் தன்மை, பராமரிக்கும் பண்புகளை அதிகரிப்பதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு குழந்தை வளர்ப்பில் கைக்கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஹரிபாஸ்கர் - கார்குழலி தம்பதியினர். இவர்கள் இருவருமே காவல்துறையில் வேலை பார்க்கின்றனர். ஊருக்கே காவல் பணியாற்றும் இவர்களின் வீட்டையும், இவர்களது இரண்டு குழந்தைகளையும் காப்பது என்னவோ இவர்கள் செல்லமாக வளர்க்கும் நாய்கள் தான். இவர்கள் தங்கள் வீட்டில் 4 நாய்களை அவற்றுக்கு செல்லப்பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக 'சச்சின்" என்ற நாய் இவர்களின் செல்லப்பிள்ளையாகவே இருந்து வந்தது. தினசரி காலை 5.30 மணிக்கே வீட்டின் கதவைத் தட்டி, உரிமையாளர்களை எழுப்பிவிடும் சச்சின், வெளிக்கதவைத் திறந்து விட்டதுமே நேராக செல்வது வீட்டின் அருகில் ஓடும் வாய்க்காலுக்குத்தான். அங்கு சென்று உற்சாக குளியல் போட்டுவிட்டுதான் வீடு திரும்பும். சச்சின் ஹரிபாஸ்கர் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் செல்லப் பிள்ளையாக வலம் வந்துள்ளது. சச்சின் குளித்துவிட்டு வரும்போது அப்பகுதியில் டீக்கடைக்காரர் நாள் தவறாமல் வைக்கும் 'பன்"னை காலைச்சிற்றுண்டியாக சாப்பிட்டுவிட்டு, சாலையைக் கடந்து வீட்டுக்கு வருவது சச்சினின் வழக்கம்.
அதேபோன்று வழக்கம்போல், நேற்று முன்தினம் வாய்க்காலுக்கு சென்று குளித்துவிட்டு, வீடு திரும்பும்போது சாலையைக் கடக்க முயன்ற சச்சினை அப்பகுதி வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சிறிது நேரத்திலேய சச்சின் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து, சச்சினின் உடலை மீட்டு, நல்லடக்கம் செய்த ஹரிபாஸ்கர், சச்சனின் இறப்புக்கு அப்பகுதியில் இரங்கல் பேனரும் வைத்துள்ளார். இந்நிலையில், தாங்கள் செல்லமாக வளர்த்த சச்சினுக்கு, புதைத்த இடத்தில் தங்கள் குழந்தைகளின் விருப்பப்படி கல்லறை அமைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.