ராஜேந்திரசோழனின் கல்வெட்டு மீது பெயிண்ட் பூசி மறைப்பு - கல்வெட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சி
’’ராஜேந்திர சோழனின் காலத்தில் வெற்றி பெற்ற இடங்கள், கோயிலின் சொத்துக்கள் உள்ளிட்டவைகளை பற்றி கல்வெட்டுக்களாக வைத்திருந்தனர்’’
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, உடையார்கோவிலில் தர்மவல்லி சமேத கரவந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், கி.பி., 10 ஆம் நுாற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. ராஜேந்திரச் சோழன், போருக்கு செல்லும் வழியில், களாச்செடிகள் நிறைந்த காடுகளில், தன்னுடைய ஆயுதங்களை மறைவாக வைத்தார். அப்போது, ஒரு சிவலிங்கம் அவரது கண்ணில் தென்பட்டது. மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், நான்கு புறமும் தீர்த்தம் அமைந்து, அதன் நடுவில் இந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி வழிபட்டால் சகல பாவம் போகும் என கூறினார்.
பின்னர் ராஜேந்திரசோழன், திரிபுவன மாதேவிப்பேரேரி என்னும் பெரிய குளத்தை நான்கு புறமும் அமைந்தாற்போல் வெட்டி, தண்ணீர் நிற்பது போல் ஏற்படுத்தினான். அதன் நடுவில் கோயிலை அமைத்து, சிவபெருமான் சொன்ன சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். களாச்செடிகளுக்கு இடையே இருந்து கிடைத்ததால் இத்தலத்தில் உள்ள சிவபெருமான் கரவிந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, படகில் சுவாமியும், பக்தர்களும் வந்த போது, படகு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு செல்ல பாதை அமைக்கப்பட்டது.
வேறு எங்கும் இல்லாத அளவிற்கு, மிகவும் பழமையான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட குளத்தின் நடுவில் உள்ள கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இத்தகையை சிறப்பு மிக்க கோயிலில் உள்ள பழமையான கல்வெட்டில், குலோத்துங்க சோழனின் 18-வது ஆட்சி ஆண்டில், பழுதடைந்த லிங்கத்தின் பீடத்தை அமைக்க புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளியூர் மலை பகுதியில் வெட்டி எடுத்து வரப்பட்டதாகவும், பல்வேறு கோவிலுக்கு தேவையான கற்களும் கொண்டு வரப்பட்டதாகவும், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் 2013 ஆம் ஆண்டு திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், கோயிலின் திருப்பணியின் போது, சுற்று சுவரில் உள்ள கல்வெட்டுகள் மீது சிமெண்ட் மற்றும் வர்ணம் பூசி மறைத்து விட்டனர். இதனால் கோயிலின் உள்ள விலை உயர்ந்த பொருட்கள், அசையும், அசையா சொத்துக்கள் உள்ள கல்வெட்டை மறைத்திருப்பதால், கல்வெட்டு ஆய்வாளர்கள் மட்டுமின்றி அப்பகுதி கிராம மக்கள் வேதனையை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், இந்திய தொல்லியியல் துறை மூலம் கோயிலின் சுவற்றிலுள்ள சிமெண்ட் மற்றும் வர்ணம் பூசி மறைத்திருப்பதை, மீண்டும் பழைய படி, மீட்டு படிமம் எடுத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குணா என்பவர் கூறுகையில், இக்கோவிலில் தொல்லியல் ஆய்வு செய்யக் கூடிய அளவிற்கு பழமையான செய்திகள் அடங்கக் கூடிய கல்வெட்டுகள் அமைந்துள்ளது. ராஜேந்திர சோழனின் காலத்தில் வெற்றி பெற்ற இடங்கள், கோயிலின் சொத்துக்கள் உள்ளிட்டவைகளை பற்றி கல்வெட்டுக்களாக வைத்துள்ளார். ஆனால் அதிலுள்ள பெருமைகளை பற்றி தெரியாமல், கோயில் திருப்பணி செய்யும் போது, மறைத்து விட்டார்கள். அதனை அகற்றி தொல்லியல் ஆய்வு செய்து, படிமம் எடுத்து பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல், இக்கோவிலின் பெருமையை வெளி உலகத்திற்கு தமிழக அரசு கொண்டுவர வேண்டும். இது போல தஞ்சை மாவட்டத்தில் பழமையான பல்வேறு கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் அதிகாரிகளின் அலட்சியதால் சிதைந்து வருகிறது என்றனர்.